உலகில் வேறு எங்குமே பார்க்க முடியாது: 5 அரிய வேட்டைப் பறவைகள் தமிழகத்தில் கண்டுபிடிப்பு
முற்றிலும் அழிந்துபோன அரிய வகை பிணந்தின்னி கழுகுகள் உள்ளிட்ட அச்சுறுத்தலுக்கு உள்ளான பல பறவையினங்களுக்குத் தமிழ்நாட்டின் காடுகளும், புதர்க் காடுகளும், வறண்ட சமவெளிகளுமே இப்போது பாதுகாப்பான புகலிடமாக மாறியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டின் பறவைகள் என்றாலே நம் நினைவுக்கு வருவது குளிர்காலங்களில் வேடந்தாங்கல் போன்ற ஏரிகளுக்கு ஆயிரக்கணக்கில் வரும் பூநாரைகளும், வாத்துகளும்தான். ஆனால், தமிழ்நாடு வனத்துறை நடத்திய புதிய பறவைகள் கணக்கெடுப்பு, யாருமே எதிர்பார்க்காத மாஸ் உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் முற்றிலும் அழிந்துவிட்டதாகக் கருதப்படும் 'பாறு' எனப்படும் பிணந்தின்னி கழுகுகள் மற்றும் அரிய வகை வேட்டையாடும் பறவைகளுக்கு, தமிழ்நாட்டின் காடுகளும் வறண்ட புல்வெளிகளுமே இப்போது இந்தியாவின் மிக முக்கிய புகலிடமாக மாறியுள்ளது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, வனத்துறை தனது 'ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு 2025 - 2026' அறிக்கை வெளியிட்டது. இந்த ஆய்வு 2 வெவ்வேறு உலகங்களை காட்டியுள்ளது. டிசம்பர் மாத இறுதியில் 38 மாவட்டங்களில் உள்ள 1,005 நீர்நிலைகள் சோதிக்கப்பட்டன. அங்கு 6 லட்சத்திற்கும் அதிகமான பறவைகள் ‘விசிட்’ அடித்திருந்தன. பிப்ரவரி மத்தியில் காடுகள், நிலப்பரப்புகளில் உள்ள 1,108 புள்ளிகளில் ஆய்வு நடந்தது. இதில் 391 பறவையினங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் 228 பறவைகள் தமிழ்நாட்டின் நிரந்தரக் குடிமக்கள்; 72 பறவைகள் சீசனுக்கு மட்டும் வரும் வெளிநாட்டு கெஸ்ட்டுகள்.
சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் சிவப்புப் பட்டியலில் 'அழியும் ஆபத்தில்' உள்ள 35 பறவையினங்கள் தமிழக நீர்நிலைகளிலும், 36 பறவையினங்கள் தமிழகக் காடுகளிலும் தஞ்சம் புகுந்துள்ளன. இதில் நீலகிரி சிரிப்பான் மற்றும் தவளை போன்ற பெரிய வாயைக் கொண்ட விசித்திரமான 'இலங்கை தவளைவாய் பறவை' ஆகியவையும் அடங்கும்.
வரலாற்றிலேயே முதன்முறையாக, புதிதாக தொடங்கப்பட்ட 'தமிழ்நாடு ராப்டர் ரிசர்ச் பவுண்டேஷன்' அமைப்புடன் இணைந்து, வேட்டையாடும் பறவைகளை (பருந்து, கழுகு, ஆந்தை போன்றவை) மட்டுமே தனியாக வனத்துறை கணக்கெடுத்தது. ஜனவரி 31 இரவு ஆந்தைகளுக்காகவும், பிப்ரவரி 1 பகல் நேர வேட்டைப் பறவைகளுக்காகவும் 3,600-க்கும் மேற்பட்டோர் காடுகளில் களமிறங்கினர். தமிழக நிலப்பரப்பில் சுமார் 9.57% பகுதியை சல்லடை போட்டுத் தேடியதில், 51 வெவ்வேறு வேட்டைப் பறவையினங்களைச் சேர்ந்த 5,600-க்கும் மேற்பட்ட பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
1990-களில் கால்நடைகளுக்குக் கொடுக்கப்பட்ட 'டைக்ளோஃபினாக்' என்ற வலிநிவாரணி மருந்தால், இந்தியாவின் 90%-க்கும் அதிகமான பிணந்தின்னி கழுகுகள் நஞ்சாகி அழிந்துபோயின. வட இந்தியாவில் இவை பார்ப்பதே அரிதாகிவிட்ட சூழலில், நமது மேற்குத் தமிழகம்தான் இவற்றின் கடைசிப் பாதுகாப்பு அரணாக மாறியுள்ளது. சத்தியமங்கலம், மாசினகுடி, கோவை, ஆசனூர் மற்றும் உதகை காடுகளில், அழியக் கூடிய ஆபத்தின் உச்சத்தில் இருக்கும் வெண்முதுகுப் பாறு, இந்தியப் பாறு, செந்தலைப் பாறு ஆகிய மூன்று கழுகுகள் கம்பீரமாக வாழ்ந்து வருகின்றன. குறிப்பாக, வெண்முதுகுப் பாறு கழுகு மட்டும் இந்த ஆய்வில் 39 முறை தென்பட்டுள்ளது.
பொதுவாகப் பெரிய கழுகுகள் என்றாலே அடர்ந்த அடவிக் காடுகளுக்குள்தான் வாழும் என்று நாம் நினைப்போம். ஆனால், இந்த ஆய்வு அதை உடைத்துள்ளது. சமவெளிப் பருந்து, தோகைப் பருந்து போன்ற பெரிய கழுகுகள் அடர்ந்த காடுகளை விட, வறண்ட திறந்தவெளிப் பகுதிகள், புதர்க்காடுகள் மற்றும் விவசாய நிலங்களின் ஓரங்களையே வேட்டையாட விரும்புகின்றன. ஆனால், மனிதர்களாகிய நாம் சும்மா கிடக்கும் தரிசு நிலம் என்று நினைத்து, இந்தக் காலிப் புல்வெளிகளைத்தான் வேகமாக ஆக்கிரமித்துக் கட்டிடங்களாக மாற்றி வருகிறோம். இதுதான் அந்த வேட்டைப் பறவைகளுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய ஆபத்து என அறிக்கை எச்சரிக்கிறது.
தமிழ்நாட்டின் பறவை வளம் என்பது வெறும் ஏரிகளோடு முடிந்துவிடுவதில்லை; நமது காடுகளும், புல்வெளிகளும்தான் அரிய பறவைகளைத் தாங்கி பிடிக்கின்றன. மாசினகுடி, சத்தியமங்கலம், கன்னியாகுமரி போன்ற காடுகளை நாம் பாதுகாத்தால் மட்டுமே, இயற்கையின் தூய்மைப் பணியாளர்களான கழுகுகளை நாம் எதிர்காலத்திற்குக் கொண்டு சேர்க்க முடியும்.