ஆரம்பமாகிறது கால்பந்தாட்டத் திருவிழா
சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் 23ஆவது உலகக் கிண்ணத் தொடரானது மெக்ஸிக்கோவில் வெள்ளிக்கிழமை (12) நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறவுள்ள மெக்ஸிக்கோ, தென்னாபிரிக்கா இடையிலான குழு ஏ போட்டியுடன் ஆரம்பிக்கிறது.
முதன் முறையாக 48 அணிகள் பங்கேற்கும் இம்முறைத் தொடரை ஐக்கிய அமெரிக்காவும் மெக்ஸிக்கோவும் கனடாவும் இணைந்து நடாத்துகின்றன. கனடா உலகக் கிண்ணத்தை நடாத்தும் முதல் முறை இதுவாகும்.

கடந்த 2022ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் 32 அணிகள் பங்கேற்றதிலிருந்து விரிவாக்கப்பட்ட இந்த உலகக் கிண்ணமானது ஐ. அமெரிக்காவில் 11 நகரங்களிலும் மெக்ஸிக்கோவில் மூன்று நகரங்களிலும் கனடாவில் இரண்டு நகரங்களிலும் நடைபெறுகின்றது.
கடந்த முறை 32 நாள்கள் உலகக் கிண்ணம் நடைபெற்ற நிலையில் இம்முறை ஜூலை 20ஆம் திகதி வரை 39 நாள்களுக்கு 104 போட்டிகள் நடைபெறவுள்ளன.
கடந்த 1930ஆம் ஆண்டு ஆரம்பித்த உலகக் கிண்ணத் தொடரானது ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் ஒரு முறை நடைபெறுகின்ற நிலையில், இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942, 1946ஆம் ஆண்டுகளில் மாத்திரம் நடைபெறவில்லை. இதில் இம்முறை கேப் வேர்ட், குரஸ்ஸோ, ஜோர்தான், உஸ்பெக்கிஸ்தான் போன்றவை தமது உலகக் கிண்ண அறிமுகத்தை மேற்கொள்கின்றன.
இம்முறை தொடரில் பங்கேற்கும் 48 அணிகளும் நான்கு அணிகளைக் கொண்ட 12 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிலுள்ள அணியும் குழுவிலுள்ள மற்றைய அணியுடன் ஒரு முறை மோதி முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகளும் மேம்பட்ட முடிவுகளைக் கொண்ட 8 மூன்றாமிடங்களைப் பெறும் அணிகளுமாக புதிதாக இம்முறை உருவாக்கப்பட்டுள்ள விலகல் முறையிலான இறுதி 32 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதி பெறும். பின்னர் வழமை போன்று இதிலிருந்து விலகல் முறையில் இறுதி 16 அணிகளுக்கான சுற்று, காலிறுதிப் போட்டிகள், அரையிறுதிப் போட்டிகள், மூன்றாமிடத்துக்கான போட்டி, இறுதிப் போட்டி என்பன இடம்பெறும்.
குழு ஏயில் மெக்ஸிக்கோ, தென்னாபிரிக்கா தவிர தென்கொரியா, செக் குடியரசு ஆகியன இடம்பெற்றுள்ளன. இக்குழுவிலிருந்து மெக்ஸிக்கோவும் தென்கொரியாவும் விலகல் முறையிலான சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெக்ஸிக்கோ குழாமில் இடம்பெற்றுள்ள ஜியோர்மோ ஒச்சோவா களமிறங்கும் பட்சத்தில் அவர் விளையாடும் ஆறாவது உலகக் கிண்ணமாக இது அமையவுள்ளது. 2006ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் தற்போது 40 வயதான ஒச்சோவா அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்.
குழு பியில் கனடா, கட்டார், சுவிற்ஸர்லாந்து, பொஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவியா ஆகியன இடம்பெறுள்ளன. இக்குழுவிலிருந்து சுவிற்ஸர்லாந்தும் கனடாவும் அடுத்த சுற்றுக்கு முன்னேறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

குழு சியில் ஐந்து தடவைகள் சம்பியனான பிரேஸில், கடந்த முறை அரையிறுதிக்கு முன்னேறிய மொரோக்கோ, ஸ்கொட்லாந்து, ஹெய்ட்டி ஆகியன இடம்பெற்றுள்ளன. உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றும் அணிகளில் நான்காவதாக பிரேஸில் எதிர்வுகூறப்பட்டுள்ளது. எனினும் இவ்வணியே தென்னமெரிக்க உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் ஐந்தாமிடத்தைப் பெற்றிருந்தது. நெய்மரின் உள்ளடக்கத்துடன் 2022ஆம் ஆண்டுக்குப் பின்னர் துரத்தும் துரதிர்ஷ்டத்தை துடைத்தெறிய கார்லோ அன்சிலோட்டியின் வழிகாட்டத்தில் காத்திருக்கின்றது.
குழு டியில் ஐ. அமெரிக்கா, துருக்கி, அவுஸ்திரேலியா, பராகுவே ஆகியன காணப்படுகின்றன. அமெரிக்காவும் துருக்கியும் அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ள அணிகளாகக் கருதப்படுகின்ற நிலையில், அவுஸ்திரேலியா, பராகுவேயும் பலத்த சவாலை வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை வம்சாவழி தமிழர்களில் முதலாமவராக உலகக் கிண்ணத்தில் களமிறங்கும் வாய்ப்பை அவுஸ்திரேலியக் குழாமில் இடம்பெற்றுள்ள நிஷான் வேலுப்பிள்ளை கொண்டிருக்கிறார்.

குழு ஈயில் ஜேர்மனி, ஈக்குவடோர், ஐவரிகோஸ்ட், குரஸ்ஸோ ஆகியன இடம்பெற்றுள்ளன. இதில் ஜேர்மனி, ஈக்குவடோர் ஆகியன இறுதி 32 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதி பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதோடு ஐவரி கோஸ்டும் முன்னேறக்கூடிய வாய்ப்புகளைக் கொண்டிருக்கின்றது. ஜேர்மனியின் கோல் காப்பாளர் மனுவல் நோயர் தனது ஓய்வை மீளப் பெற்று வந்தமை அவ்வணிக்கு பலமாகக் காணப்படுகின்றது.

குழு எஃப்பில் நெதர்லாந்து, ஜப்பான், சுவீடன், துனீஷியா ஆகியன இடம்பெற்றுள்ள நிலையில் நெதர்லாந்து, ஜப்பான் ஆகியன அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குழு ஜியில் பெல்ஜியம், ஈரான், எகிப்து, நியூசிலாந்து ஆகியன இடம்பெற்றுள்ள நிலையில் பெல்ஜியம், ஈரான், எகிப்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறெனினும் நட்சத்திரங்கள் இருந்தும் கடந்த முறை குழுநிலையிலிருந்து முன்னேறியிருக்காத பெல்ஜியத்துக்கு தமது 30களில் இறுதியில் இருக்கும் றொமெலு லுக்காக்கு, கெவின் டி ப்ரூனே தவிர ஜெரெமி டோக்கு மாத்திரமே நட்சத்திரமாகக் காணப்படுகின்றார்.

அடுத்து குழு எச்சில் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படும் ஸ்பெய்ன், உருகுவே, சவுதி அரேபியா, கேப் வேர்ட் ஆகியன காணப்படுகின்றன. லமீன் யமால், நிக்கொ வில்லியம்ஸ் போன்ற ஸ்பெய்ன் நட்சத்திரங்கள் காயங்களிலிருந்து குணமடைந்து வருகின்றபோதும் அவர்கள் களமிறங்குவார்கள் எனக் கூறப்படுகிறது. ஸ்பெய்னுடன் உருகுவே இக்குழுவிலிருந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும் எனக் கூறப்படுகிறது.

குழு ஐயில் அடுத்த உலகக் கிண்ணத்தை வெல்லக் கூடிய அணியான பிரான்ஸ், செனகல், நோர்வே, ஈராக் ஆகியன காணப்படுகின்றன. கிலியான் மப்பே, மைக்கல் ஒலிஸே என இருவரும் கவனிக்கத்தக்கனவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவிர ஆபிரிக்காவின் போட்டி சம்பியன்களான செனகலும் அரையிறுதி வரை முன்னேற வாய்ப்புள்ளவர்களாகக் காணப்படுகின்றனர். நோர்வேயும் மார்டின் ஒடெகார்ட், எர்லிங் ஹலான்டின் உதவியுடன் இறுதி 16 சுற்று வரை முன்னேறக்கூடிய வாய்ப்பைக் கொண்டிருக்கிறார்கள்.

குழு ஜேயில் நடப்புச் சம்பியன்களான ஆர்ஜென்டீனா, ஒஸ்திரியா, அல்ஜீரியா, ஜோர்தான் ஆகியவை காணப்படுகின்றன. லியனல் மெஸ்ஸியுடன் ஆர்ஜென்டீனா கிண்ணத்தை தக்க வைக்கும் என அவ்வணியின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்தாலும் அரையிறுதிக்கு முன்னேறுவதே கடினமாக இருக்கும் என நம்ப்படுகின்றது. நான்காண்டுகளில் மெஸ்ஸியின் பங்களிப்புக் குறைந்திருக்கின்ற நிலையில் ஒச்சோவாவுடன் இணைந்து ஆறாவது உலகக் கிண்ணத்தை காணவுள்ளவராக அவர் மாறவுள்ளார். ஆர்ஜென்டீனாவுடன் ஒஸ்திரியா, அல்ஜீரியா அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குழு கேயில் போர்த்துக்கல், கொலம்பியா, உஸ்பெக்கிஸ்தான், கொங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகியன காணப்படுகின்றன. போர்த்துக்கல், கொலம்பியா ஆகியன இக்குழுவிலிருந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பைக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் அனைவரும் எதிர்பார்க்கும் மெஸ்ஸி எதிர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மோதல் காலிறுதியில் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. நாள், நட்சத்திரம் பொருந்தினால் அது இறுதிப் போட்டியிலும் அமையலாம். ஒச்சோவா, மெஸ்ஸிக்கு அடுத்ததாக ஆறாவது உலகக் கிண்ணம் காண்பவராக ரொனால்டோ மாறுகிறார்.

குழு எல்லில் இங்கிலாந்து, குரோஷியா, பனாமா, கானா ஆகியன இடம்பெற்றுள்ள நிலையில். ஜேர்மனி, ஸ்பெய்னுடன் உலகக் கிண்ணத்தை வெல்லும் அணியாக சிலரால் கருதப்படும் இங்கிலாந்துடன் குரோஷியா அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும் இறுதி 16 அணிகளுக்கான சுற்று, காலிறுதியில் இங்கிலாந்து பலத்த சவாலை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.