
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் முக்கிய கோரிக்கை
அதிபர் ஆசிரியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான கோரிக்கையை முன்வைத்து, கல்வி அமைச்சின் செயலாளரை சந்திப்பதற்கான வாய்ப்பை வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில், 11 முக்கிய விடயங்களை குறிப்பிட்டு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக அந்த சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
23 வருடங்களாகப் பேசு பொருளாக உள்ள அதிபர் மற்றும் ஆசிரியர்களின் முதன்மையான வேதன பிரச்சினை தொடர்பாக வேதன ஆணைக்குழுவின் தீர்மானத்தினை செயல்படுத்த விடாமல் தடுத்தல் தொடர்பில் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆசிரியர்களின் வகுப்பறைக் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளுக்கு இடையூறாக அமையும் படிவங்கள் நிரப்பும் செயற்பாடுகள், ஆசிரியர்களின் கடமைகள், செயற்பாடுகள் தொடர்பான படிவம் மற்றும் சம்பள திட்டப்படிவம் வழங்குதல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள தமிழ் மாணவர்கள், தங்கள் தாய்மொழியில் கல்வி பொதுத் தராதர உயர்தர விஞ்ஞானம் மற்றும் கணிதம் போன்ற பாடங்களை மேம்படுத்திக்கொள்ள பாடசாலைகள் இல்லாமை மற்றும் அந்த வளங்கள் உள்ள பாடசாலைக்குச் செல்ல வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கபடாமை தொடர்பிலும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
அத்துடன், பாடசாலையை முன்னெடுத்துச் செல்ல பெற்றோர்களிடம் பணம் அறவிடுதல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் கல்வி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாட எதிர்பார்ப்பதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.