பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின – நாட்டில் பலத்த மழை வீழ்ச்சிக்கான சிவப்பு அறிவித்தல்!
நாட்டில் பல பகுதிகளில் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதனையடுத்து, பலத்த மழை வீழ்ச்சிக்கான சிவப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதோடு, சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதேநேரம், வடமத்திய மாகாணத்தில் தொடர்ச்சியாக மழை பெய்யும் என்றும் ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதேநேரம், நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பில் தொடர்ந்தும் பெய்துவரும் பலத்த மழை காரணமாக பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக கொழும்பு – கிரேன்பாஸ், மாளிகாவத்தை, வோட் பிளேஸ், பேஸ்லைன் மற்றும் தும்முல்ல உள்ளிட்ட முக்கிய வீதிகளில் வெள்ளநீர் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.