வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருவருக்கு கொரோனா

வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருவருக்கு கொரோனா

குவைத் நாட்டில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா பெரியகாடு தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களில் இருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

இந்தவகையில் அண்மையில் வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்ட பல இலங்கையர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் கொரோனா தடுப்பு சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் கடந்த மாதம் 26 ஆம் திகதி நாடு திரும்பிய 100 பேர் வவுனியா பெரியகாடு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அங்கு தங்க வைக்கப்பட்டிருப்பவர்களிற்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்றிருந்தது. பரிசோதனை முடிவுகளின்படி இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து இருவரையும் வெலிகந்தை கொரோனா தடுப்பு சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை பம்பைமடு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 157 பேர்  கொரோனா‌ தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் அவர்களது சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.