மாகாண சபை முறை பயனற்றது! 13ஐ ஒழித்துக்கட்ட போராடும் சரத் வீரசேகர
13 ஆவது திருத்தத்தை ஒழிப்பது தொடர்பில் தான் அரசாங்கத்திற்கு தனியான யோசனையொன்றை முன்வைக்க இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
அமைச்சு பதவி வகித்தாலும் தனது நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாதென்று கூறிய அவர்,இது தொடர்பில் தொடர்ந்து குரல் கொடுப்பதாகவும் குறிப்பிட்டார்.
13 ஆவது திருத்தத்திற்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆளும் தரப்பு பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் தான் கருத்து முன்வைத்ததாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்,
13 ஆவது திருத்தத்தை ஒழிக்க வேண்டும் என்ற எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது.புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட உள்ள நிலையில் 13 அவது திருத்தத்தை ஒழிப்பது தொடர்பில் ஆளும் தரப்பு கூட்டத்தில் கருத்து முன்வைத்தேன்.
எனது கருத்தை சிலர் ஆட்சேபித்தார்கள்.அமைச்சராக நியமிக்கப்பட்டாலும் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை. எனவே 13 ஆவது திருத்தத்தை ஒழிப்பது தொடர்பில் எனது யோசனையை அரசாங்கத்திற்கு முன்வைக்க இருக்கிறேன்.இதற்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்.
13 ஆவது திருதத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட மாகாண சபைகளினால் எந்த பயனும் ஏற்படவில்லை. அவற்றுக்கு ஒதுக்கிய நிதிகள் வீணடிக்கப்பட்டன.
மாகாண சபைகளுக்கு கல்வி அமைச்சர்கள்,விவசாய அமைச்சர்கள் போன்றோர் நியமிக்கப்பட்டாலும் அவர்களால் என்ன செய்ய முடிந்தது. சகல தேவைகளுக்கும் கொழும்பிற்கு வர வேண்டும். எனவே இந்த மாகாண சபை முறை பயனற்றது என்றார்.