யாழ். மக்களிடம் அவசர உதவி கோரிய கட்டளைத் தளபதி
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய கேட்டுக் கொண்டுள்ளார்.
கரணவாய் வடக்கு கரவெட்டி கொற்றாவத்தை ஜே 360 கிராம சேவகர் பிரிவில் கணவனை இழந்து மூன்று பிள்ளைகளுடன் வசித்து வரும் பெண்தலைமைத்துவ குடும்பத்திற்கான வீட்டிற்கான அடிக்கலினை நாட்டியதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதன்போது செய்தியாளர்களிடம் தொடர்ந்தும் பேசிய அவர்,
யாழ்ப்பாண குடாநாட்டை பொறுத்தவரைக்கும் சட்டவிரோதமான போதைப் பொருட்கள் விற்பனை செய்வோர் மற்றும் சட்டவிரோத செயலபாடுகள் இடம்பெற்று வருகின்றமை நாமறிந்த விடயம்தான். எனினும் இது தொடர்பில் பொலிஸாரால் துரிதமாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
பொலிஸார் எம்மிடம் உதவி கோரும் பட்சத்தில் நாங்கள் அவர்களுக்கு உரிய உதவிகளை உரிய நேரத்தில் வழங்கி வருகின்றோம்.
எனினும் இந்த விடயங்கள் தொடர்பில் சாதாரண பொது மக்களுக்கு நிறைய தகவல்கள் தெரியும். சட்டவிரோதமான செயற்பாடுகளை நிறுத்த வேண்டுமேயானால் பொதுமக்கள் எங்களுக்கு உரிய தகவல்களை வழங்கினால், நாங்கள் அதனை பொலிஸாருடன் இணைந்து அதனைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முடியும். சம்பந்தப்பட்டவர்களுக்குரிய நடவடிக்கையினையும் உடனடியாக நாங்கள் எடுக்க முடியும்.
இதேவேளை, இராணுவத்தினரால் பொதுமக்களுக்கான சமூக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதிலும் யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்த வரைக்கும் பாதுகாப்பு படையினர் மக்களுக்கு சமூக வேலைத் திட்டங்கள் பலவற்றை மேற்கொண்டு வருகிறார்கள். அவ்வாறான ஒரு வேலைத் திட்டங்களில் ஒன்றுதான் இந்த வறிய மக்களுக்கு வீடு அமைத்துக் கொடுக்கும் பணியானது.
நான் பெருமையாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன், இன்றுவரை 710 வீடுகளுக்கும் மேல் நாங்கள் வறிய மக்களுக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறோம். அதேபோல் மேலும் இன்னும் இரண்டு மாதங்களில் இருபது வீடுகள் நாங்கள் கட்டி முடித்து உரிய மக்களுக்கு வழங்கி வைக்கவுள்ளோம்.
அது மாத்திரமன்றி, நாங்கள் பொதுமக்களுக்கான பல்வேறுபட்ட சமூக வேலைத் திட்டங்களை மேற்கொள்வதற்காக இணைந்து செயற்பட்டு வருகின்றோம். அதாவது பொலிஸ் மற்றும் முப்படையினருடன் இணைந்து பொதுமக்களுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
பாதுகாப்பு தரப்பினராகிய நாங்கள் பொதுமக்களின் பாதுகாப்பு, நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம். மக்களின் நலன்களை பாதுகாக்கவே இராணுவத்தினர் செயற்படுகின்றார்கள் என்றார்.