கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பான 100 நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 92ஆவது இடம்!

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பான 100 நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 92ஆவது இடம்!

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பான 100 நாடுகளின் பட்டியலில் இலங்கை 92ஆவது இடத்தில் உள்ளது.

ஆழமான அறிவுக்குழு (Deep Knowledge Group) என்ற சிந்தனைக் குழு இந்த தரவரிசையை கணித்துள்ள நிலையில், தரவரிசையில் அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளுக்கு அடுத்தே இலங்கை உள்ளது.

இந்த தரவரிசைப்படி, கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்பான நாடாக ஜேர்மனி முதலாவதாக உள்ளது. அதைத்தொடர்ந்து நியூசிலாந்து, தென் கொரியா, சுவிட்சர்லாந்து, ஜப்பான், அவுஸ்ரேலியா, சீனா, ஆஸ்திரியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் சிங்கப்பூர் ஆகியன முதல் பத்து இடங்களில் உள்ளன.

இதேவேளை, அமெரிக்கா 55ஆவது இடத்திலும், பிரேசில் 66ஆவது இடத்திலும் இந்தியா 80ஆவது இடத்திலும் உள்ளன.

இந்தத் தரவரிசை, எத்தனை நோய்த் தொற்றுகள் உள்ளன அல்லது கொரோனாவால் எத்தனை பேர் இறந்தார்கள் என்பதை மட்டும் வைத்து கணிக்கப்படவில்லை என போர்ப்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

மாறாக, இது பல மருத்துவ, பொருளாதார மற்றும் அரசியல் காரணிகளைப் பற்றிய ஒரு சிக்கலான தொடர் மதிப்பீடுகளைக் கொண்டு முன்னெடுக்கப்பட்டதாகவும் அதுவே நாடொன்றின் மதிப்பெண்ணை அதிகரிக்கின்றன அல்லது குறைக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.