தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கான 73 ஆவது ஒன்று கூடல்...!

தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கான 73 ஆவது ஒன்று கூடல்...!

ஐக்கிய நாடுகளின் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கான பிராந்திய 73வது ஒன்று கூடல் நிகழ்வு எதிர்வரும் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் தாய்லாந்தில் நடைபெறவுள்ளது.

இந்தநிகழ்வில், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என உலக சுகாதார ஸ்தாபனத்தினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் சர்வதேச ரீதியாக கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், தடுப்பூசி மருந்துகள் மற்றும் தொற்றில் இருந்து மக்களை மீட்பது போன்ற விடயங்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் ரெட்ரொஸ் ஆதனொம்,  (Tedros Adhanom)   தென் கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குனர் பூனம் கெற்ரபால், (Poonam Khetrapal)பல்வேறு நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் உள்ளிட்ட பல பிரமுகர்கள் இந்த நிகழ்வில் உரையாற்றவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட் 19 தொற்றில் பீடிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் இன்று குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொவிட் 19 தொற்றில் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 926 ஆக அதிகரித்துள்ளது.