குற்றங்கள் குறையாவிட்டால் ஆணைக்குழுக்கள் இருந்து என்ன பயன்?- அலி சப்ரி
குற்றங்கள் குறையாவிட்டால், ஆணைக்குழுக்கள் இருந்து என்ன பயன்? மக்களின் பாதுகாப்பைத்தான் நாம் முதலில் பார்க்கவேண்டும் என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் அலி சப்ரி மேலும் கூறியுள்ளதாவது, “2015 ஆம் ஆண்டு போதைப்பொருள் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அப்போது 6700 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
2016 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை, 7900 ஆக அதிகரிக்கப்பட்டது. கடந்த ஆண்டு 16 ஆயிரமாக உயர்ந்தது.
இப்போது 14 ஆயிரத்துக்கும் அதிகமாக இந்த எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. ஆணைக்குழுக்களை நியமித்து என்ன பயன் உள்ளது?
குற்றங்கள் குறையாவிட்டால், ஆணைக்குழுக்கள் இருந்து என்ன பயன்? மக்களின் பாதுகாப்பைத் தான் நாம் முதலில் பார்க்கவேண்டும்.
97 அறிக்கைகள் வந்தும், ஈஸ்டர் தாக்குதலை இவர்களால் நிறுத்திக் கொள்ள முடியாது போனது. இவ்வாறான ஆணைக்குழுக்கள் எதற்காக இருக்க வேண்டும்?
அதற்குப் பொறுப்பான பொலிஸ்மா அதிபரைக்கூட நீக்க முடியாத நிலைமைத்தான் காணப்படுகிறது. 69 இலட்சம் மக்களின் வாக்குகளைப் பெற்றும், ஜனாதிபதிக்கு பொலிஸ்மா அதிபரை நீக்க அதிகாரம் இல்லை.
அறிக்கைகளை தயாரித்து அனுப்பவா ஆணைக்குழுக்களை நியமித்தோம்? இவ்வாறான வேலை செய்ய முடியாத ஆணைக்குழுக்கள் நாட்டில் ஏன் இருக்க வேண்டும்” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்