பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

வவுனியா நகர சபை சுகாதார ஊழியர்களில் ஒரு தொகுதியினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பள ஏற்றம் வழங்கப்படாமை, சம்பள மீளாய்வு செய்யப்படாமை, உள்ளக வெற்றிடங்கள் நிரப்பப்டாமை போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே வவுனியா நகரசபையின் ஒருதொகுதி சுகாதார ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நகரசபை வாயிலில் ஒன்றுகூடிய அவர்கள் பதாதைகளை ஏந்தியவண்ணம் காலை 7 மணிமுதல் தமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி மன்றங்களிலுள்ள அட்டவணைப்படுத்தப்படாத பதவிகளின் வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஆட்சேர்ப்பு ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக அனுமதி வழங்கப்பட்டது. குறைந்த கல்வித்தகமையோடு நிரந்தர நியமனங்களை வழங்கும்படியும், 180 நாட்கள் கடமையாற்றியவர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கான அனுமதியும் அரசினால் வழங்கப்பட்டது.

இதனை செய்து கொடுக்காமல் திரைசேரியின் செயலாளரின் கடிதத்தை காரணம் காட்டி எந்தவிதமான நியமனங்களையும் வழங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக எமக்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள்.

உண்மையில் ஆளணிக்கான அனுமதி இல்லையென்றால் மட்டுமே திரைசேரியில் ஆளணிக்கான அனுமதி பெறவேண்டும். எனினும் நகரசபையில் ஆளணிக்கான வெற்றிடம் தேவைக்கு அதிகமாக உள்ளது அதன் அடிப்படையில் நேர்முகத்தேர்வுகளில் சித்திபெற்றுள்ள 11 ஊழியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கமுடியும்.

​மேலும் சம்பள மீளாய்வு என்ற பேரில் ஊழியர்கள் பெற்றுவந்த சம்பளங்களை குறைத்து வழங்கியநிலையில் இதனை வடமாகாண சபையிடம் தெரிவித்த வேளையில் வடக்கு மாகாண சபையின் 32 ஆவது சபை அமர்வில் ஊழியர்களின் பதவி மாற்றத்தின் போது அவர்கள் பெற்று வந்த சம்பளத்தை குறைத்து நிர்ணயித்தமை தவறானது என மாகாணசபையால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரசநிர்வாக சுற்றறிக்கைகளுக்கு அமைவாக சம்பள மீளாய்வுகள் குறியீட்டின் அடிப்படையில் செய்து வழங்கப்படவேண்டும் என தேசிய சம்பள பதவியணி ஆணைக்குழு கடிதம் அனுப்பியது. இதனை அடிப்படையாக வைத்து மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழு மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் மற்றும் உள்ளுராட்சி ஆணையாளர் ஆகியோர் பதவிக்குரிய சம்பளக் குறியீட்டு அட்டவணையை கையொப்பத்துடன் வடக்கு மாகாணத்தில் வெளியிட்டது.

அதன் அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் உள்ள உள்ளுராட்சி சபைகளின் ஊழியர்களுக்கு சம்பள மீளாய்வுகள் செய்து வழங்கப்பட்டன.

வவுனியா நகரசபை ஊழியர்களுக்கு மாத்திரம் மேற்குறிப்பிட்டதற்கு அமைவாக சம்பள மீளாய்வு செய்யப்படாமல் உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றுநிரூபம் - 2015 என போலியான சுற்று நிரூபத்தை தயாரித்து சம்பள மீளாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இவைகளை தேசிய சம்பள பதவியணி ஆணைக்குழுவின் பணிப்பாளருக்கு அனுப்பிவைத்த வேளையில் அதனைப் பார்வையிட்ட பணிப்பாளர் வழங்கிய சம்பளங்கள் யாவும் பிழையானது என குறிப்பிட்டுள்ளார். இதனால் ஊழியர்கள் மாதம் ஒன்றிற்கு தமது அடிப்படைச் சம்பளத்திலிருந்து சிலதொகையை இழந்து வருகின்றார்கள்.

அத்துடன் வருடாந்த சம்பள ஏற்றங்களை வழங்குவதற்கான அனுமதி அரசினால் வழங்கப்பட்டும் பல வருடங்கள் இடைநிறுத்தப்பட்ட சம்பள ஏற்றங்கள் இன்றுவரை தேக்கநிலையென தெரிவித்து வழங்கப்படாமல் இருக்கிறது.

அத்துடன் ஊழியர்களின் சம்பள மீளாய்வானது 2013 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை செய்யப்படவில்லை கேட்கும் போதெல்லாம் ஆய்வுசெய்யப்பட்டு வருவதாக தெரியப்படுத்துகின்றார்கள். இரண்டு நாட்களில் செய்யப்படுகின்ற அந்தவிடயத்திற்காக 11குழுக்கள் நியமிக்கப்பட்டும் பலன் ஒன்றுமில்லை. மாகாணசபையின் தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை நகரசபையின் தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை.

எமது கோரிக்கைக்கு அமைவாக வடக்கு மாகாண ஊழியர்களின் நலன் சேவைக்காலம் என்பவற்றை கருத்திற்கொண்டு உள்ளக வெற்றிடங்களை வழங்கும்படி முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரால் சேவைப்பிரமாணக்குறிப்பிற்கு அமைய அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் திணைக்கள செயலாளர்கள் இன்று வரை அதனை நடைமுறைப்படுத்தாமல் இழுத்தடிக்கின்றார்கள். ''சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்கமாட்டார்கள்'' என்ற நிலையில் இன மத பேதம் சாதியம் என்ற அடிப்படையில் உள்ளக வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் அதிகாரிகள் செயற்படுவதினால் 2008 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை ஊழியர்கள் ஏமாற்றப்படுகின்றார்கள். இதனாலே ஊழியர்களின் தீர்மானத்திற்கமைவாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளனர்.

ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோநோகராதலிங்கம், தீலிபன்,ஆகியோர் சந்தித்து கலந்துரையாடிருந்தனர்.

இது தொடர்பாக எதிர்வரும் 12 ஆம் திகதி உரிய அதிகாரிகளுடனும், ஊழியர்களுடனும் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு இதற்கான தீர்வினை பெறமுயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனால் தெரிவிக்கப்பட்டது.