மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்றுக்கு செல்ல முடியுமா? – தீர்ப்பு இன்று
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்றத்திற்கு செல்ல முடியுமா என்பது தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கவுள்ளது.
நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரேமலால் ஜயசேகர, சட்டப்படி நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது என சட்டமா அதிபர் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு கோரி அவரது சட்டத்தரணி ரிட் மனுவொன்றை மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்தார்.
அதனைத்தொடர்ந்து, குநித்த ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா இல்லையா என்பது தொடர்பான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்றத்திற்கு செல்ல முடியுமா என்பது தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில், ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர் ஒருவரை இரத்தினபுரி மாவட்டத்தின் கஹவத்த பகுதியில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில், பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் கடந்த ஜுலை மாதம் 31ஆம் திகதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.