விரைவில் புதிய அரசியலமைப்பு! வெளிவிவகார அமைச்சரின் தகவல்
நாட்டின் நிர்வாகம் மற்றும் கொண்டு நடத்தல் என்பனவற்றுக்கு பாரிய தடையாக 19ஆவது திருத்தச்சட்டம் காணப்படுகின்றது. நாட்டை கொண்டு நடத்துவதில் பாரிய தடைகள் 19ஆவது திருத்தம் காரணமாக ஏற்பட்டன. அதனை கடந்த ஆட்சியில் மக்கள் கண்டனர் என அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அதனை நாம் மறக்க முடியாது. மக்களின் மற்றம் நாடாளுமன்றத்தின் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். தடைகளை நீக்கி நாட்டை முன்னோக்கி நகர்த்த வேண்டும். அதற்காகவே மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் அதன் இருப்பு ஸ்திரத்தன்மை என்பனவற்றை கருத்திற் கொண்டே அரசாங்கம் 20ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டுவந்துள்ளது.
ஆனால் தற்போது 20ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டாலும் விரைவில் முழுமையான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக புதிய அரசியல் அமைப்பை வரைவதற்கு நிபுணர் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழு அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்கும். மிக முக்கியமாக நாட்டின் தேர்தல் முறையை விரைவாக மாற்ற வேண்டியுள்ளது.
அத்துடன் தற்போதைய அரசியல் அமைப்புக்கு 42 வருடங்கள் கடந்துவிட்டன. 19 தடவைகள் இந்த அரசியல் அமைப்பு திருத்தப்பட்டுள்ளது. அதாவது அரசியலைமைப்பே மாறிவிட்டுள்ளது. அதுவே தற்போது மக்களின் முன்னேற்றத்துக்கு தடையாக உள்ளது. எனவே புதிய அரசியலமைப்பை அரசாங்கம் விரைவாக கொண்டுவரும் என குறிப்பிட்டுள்ளார்.