நிவ் டயமன்ட் கப்பல் விவகாரம்- அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்த பிரதமர்
எம்.டி நியூ டயமன்ட் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் மீண்டும் தீப்பரவல் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படை தளபதி வைஸ் அத்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எம்.டி நியூ டயமன்ட் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலின் விளைவுகள் தொடர்பில் சட்டமா அதிபர், விடயத்திற்கு பொறுப்பான பிரிவுகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி, அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
கப்பல் விபத்து குறித்த சட்ட விடயங்கள் தொடர்பில் மீளாய்வு செய்யவும் உரிய ஆலோசனைகளை வழங்குவதற்காகவும் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடற்படை தளபதி, இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர், வர்த்தக கப்பல் பணிப்பாளர் நாயகம் மற்றும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவருடனும் இதன்போது சட்டமா அதிபர் கலந்துரையாடியுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எம்.டி நியுவ் டயமன்ட் கப்பல் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக இலங்கை வந்துள்ள வெளிநாடுகளை சேர்ந்த விசேட நிபுணர்கள் கல்முனை பகுதிக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் அவர்கள் தீப்பற்றியுள்ள கப்பலுக்கு செல்வதற்கான நடவடிக்கைகள் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த விசேட நிபுணர்கள் இன்று இலங்கைக்கு வருகைத்தந்தனர்.
கப்பலின் தற்போதை நிலைமை, எதிர்வரும் நாட்களில் ஏதேனும் வெடிப்பு இடம்பெற வாய்ப்புள்ளதா? என்பது தொடர்பில் அவர்கள் ஆய்வு செய்யவுள்ளனர்.
குறித்த கப்பலுக்குரிய நிறுவனத்தினால் நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்ட குழுவில் மீட்பு குழுவினர், அனர்த்த மதிப்பீட்டாளர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்கள் உள்ளிட்ட 10 பேர் அடங்குகின்றனர்.
இதேவேளை, நிவ் டயமன்ட் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பெரும் பங்களிப்பை வழங்கிய இலங்கை மற்றும் இந்திய பாதுகாப்பு பிரிவினர்கள் அனைவருக்கும் தமது நன்றியை தெரவித்துக்கொள்வதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.