அதிகாலையில் இடம்பெற்ற அனர்த்தம்! மயிரிழையில் தப்பிய மக்கள்
மட்டக்களப்பு - போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேத்துச்சேனைக் கிராமத்திற்குள் புகுந்த 3 காட்டு யானைகளால் அக்கிராமமே விடிய விடிய கண்விழித்திருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கினறன.
இன்று அதிகாலை ஒரு மணியளவில் கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானைக் கூட்டம் வீடுகளை அடித்து உடைத்துள்ளதுடன், வீடுகளில் மக்கள் தமது உணவுக்காக வைத்திருந்த நெல் மூட்டைகளையும் உண்டு, வேலிகள், மற்றும் நெல்குற்றும் ஆலை ஒன்றையும் முற்றாக சேதப்படுத்தி விட்டுச் சென்றுள்ளன.
இதுகுறித்து மயிரிழையில் உயிர் தப்பிய 4 பிள்ளைகளின் தந்தையான சீனித்தம்பி கோபாலசிங்கம் கருத்து தெரிவிக்கையில்,
ஆழ்ந்த உறக்கத்திலிருந்த எமக்கு அதிகாலை ஒரு மணியளவில் வெளியில் ஏதோ சத்தம் கேட்டது.
நான் மாத்திரம் வெளியில் வந்து பார்த்தேன், மிகவும் உயரமான யானை ஒன்று எமது வீட்டை நோக்கி வருவதை அவதானித்தேன்.
பின் உறக்கத்திலிருந்த மனைவி பிள்ளைகளை எழுப்பிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி வீதிக்கு வந்துவிட்டோம்.
பின் இன்னுமொரு யானை வந்தது, இரண்டு யானைகளுமாக எமது வீட்டின் முன் சுவர் பகுதியை உடைத்து உள்ளிருந்த நெல் மூட்டைகளை இழுத்து நிலத்திலே கொட்டி உண்டன.
இந்நிலையில் கிராம மக்கள் ஒன்றுகூடிவிட்டனர். யானைகள் எமது வீட்டை உடைப்பதை அவதானித்த நாம் அயலவர்களின் உதவியுடன் தீப்பந்தம் ஏந்தியும், உரக்கச் சத்தமிட்டும் யானைகளைத் துரத்த முயச்சித்தோம். எம்மைப் பொருட்படுத்தாத அந்த யானைகள் எம்மை தாக்குவதற்கு வந்தன.
நாம் வீட்டிற்குள்ளே உறக்கதிலிருந்து எழும்பாமல் இருந்திருந்தால் எமது 4 பிள்ளைகளைகளும் நாமும், உயிரிழந்திருப்போம் - மயிரிழையில் தான் உயிர் தப்பினோம்.
இந்நிலையில் இச்சம்வம் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் மற்றுமொரு வீட்டை மற்றொரு காட்டு யானை தாக்கியது. அவ்வீட்டிலிருந்தவர்கள் கூக்குரலிட அந்த யானை அவ்வீட்டின் யன்னல் பகுதியை தாக்கிவிட்டுச் சென்றுள்ளது.
இதுகுறித்து வனஜீவராசிகள் பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவித்த போதிலும் நாங்கள் கிராமத்தில் நிலை கொண்டிருந்த காட்டு யானைகளை ஒருவாறு வெளியேற்றிய பின்னர் தான் அவர்கள் வந்தார்களென அவர் தெரிவித்துள்ளார்.