பற்றி எரிந்த கப்பல்! ஸ்ரீலங்கா விரையும் விசேட குழு
ஸ்ரீலங்கா கரையில் இருந்து 40 கடல்மைல்களுக்கு அப்பால் தரிக்கப்பட்டிருக்கும் தீப்பற்றிய கப்பலின் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வெளிநாடுகளின் நிபுணர்கள் இன்று இலங்கை வருகின்றனர்.
கப்பல்; உரிமையாளரின் ஏற்பாட்டில் மீட்பு நடவடிக்கை நிபுணர்கள், அனர்த்த மதிப்பீட்டாளர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்கள் உட்பட 10 பிரிட்டிஷ் நிபுணர்கள் இன்று மத்தளை வானூர்தி நிலையத்துக்கு வருகின்றனர்.
பின்னர் அவர்கள் கல்முனையில் இருந்து அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ள கப்பல் இருக்கும் இடத்துக்கு அழைத்துச்செல்லப்படவுள்ளதாக அறிவிக்கப்பபட்டுள்ளது.
இதேவேளை கப்பலின் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்காக நேற்று இந்தியாவின் மேலும் இரண்டு கப்பல்கள் இணைந்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவசர நிலைமைகளை கண்காணிப்பதற்காக இந்தியாவின் இரண்டு டேனியர் வானூர்திகள் தொடர்ந்தும் மத்தளை வானூர்தி தளத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இலங்கை மற்றும் இந்திய கடற்படை மற்றும் பேரழிவு தணிப்பு நடவடிக்கைக் குழுக்கள் கப்பலில் தீ பரவுவதை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளன,
மேலும் கப்பல் கடலில் எண்ணெய் கசிவதால் எந்த ஆபத்தும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆபத்தின் தேசிய முக்கியத்துவம் கருதி இலங்கை துறைமுக ஆணையம்,ஹம்பன்தோட்டை சர்வதேச துறைமுகக் குழு, கொழும்பு வரையறுக்கப்பட்ட கப்பல்துறை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இந்திய எண்ணெய் கழகம் மற்றும் வரையறுக்கப்பட்ட சிலோன் பெற்றோலியம் ஸ்டோரேஜ்; ஆகியவை கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் மத்தியஸ்தத்தின் மூலம் தீயை அணைக்கும் இரசாயனங்களை கடற்படைக்கு வழங்கியுள்ளன.