நாடாளுமன்ற அமர்வுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம்

நாடாளுமன்ற அமர்வுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம்

எதிர்வரும் 08 முதல் 11 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த கூட்டத்தில் ஆளும் கட்சியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய 08 ஆம் திகதி மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை, நிதி அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை மற்றும் 2020 வருட நடுப்பகுதியில் அரசாங்கத்தின் நிதி நிலைமை குறித்த அறிக்கை என்பன பற்றி சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறவுள்ளது.

அன்றையதினம் பிற்பகல் 1 மணி முதல் மாலை 6.30 மணிவரை சபை அமர்வுகள் இடம்பெறும்.

அத்துடன் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி உற்பத்தி வரி சட்டத்தின் கீழான 9 ஒழுங்குவிதிகள், மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் 10 கட்டளைகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

செப்டெம்பர் 10ஆம் திகதி துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான 6 கட்டளைகள், சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 3 ஒழுங்குவிதிகள் மற்றும் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 6 தீர்மானங்கள் என்பன விவாதிக்கப்படவுள்ளன.

அதேநேரம் செப்டெம்பர் 11 ஆம் திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் தொடர்பான அனுதாபப் பிரேரணை விவாதம் நடைபெறவுள்ளது.

அன்றையதினம் முற்பகல் 10.30 முதல் பிற்பகல் 6.30 வரை அமர்வுகள் இடம்பெறவிருப்பதுடன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்தவிவாதத்தில் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.