சிறைச்சாலைகளில் கைத்தொலைபேசி பயன்பாட்டை தடுக்க அதி நவீன கருவிகள்

சிறைச்சாலைகளில் கைத்தொலைபேசி பயன்பாட்டை தடுக்க அதி நவீன கருவிகள்

சிறைச்சாலைகளில் கைத்தொலைபேசி பயன்பாட்டை தடுக்கும் நோக்கில் அதி நவீன கருவிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலைகளில் இரகசியமான முறையில் கைத்தொலைபேசிகளை பயன்படுத்தி பாரியளவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இரகசியமான முறையில் கைத்தொலைபேசிகளை சிறைச்சாலைகளுக்குள் எடுத்துச் சென்றாலும் அவற்றை பயன்படுத்த முடியாத வகையில் இந்த அதி நவீன கருவிகள் செயற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

கைத்தொலைபேசியின் முக்கிய உதிரிப் பாகங்களை செயலிழக்கச் செய்யக் கூடிய வகையில் இந்த அதி நவீன கருவிகள் தொழிற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கைத்தொலைபேசியை பயன்படுத்தி பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக அடையாளம் காணப்பட்டுள்ள வெலிக்கடை, போகம்பரை, களுத்துறை மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலைகளில் முதல் கட்டமாக இந்த அதி நவீன கருவிகள் பயன்படுத்தப்பட உள்ளன.

பின்னர் ஏனைய சிறைச்சாலைகளிலும் இந்த அதி நவீன கருவிகள் பொருத்தப்பட உள்ளன.

இதேவேளை சிறைச்சாலைகளில் இடம்பெற்று வரும் பல்வேறு குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துசார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.