
மீண்டும் ஒரு இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு! தகைமைகள் இவை தான்
ஸ்ரீலங்காவில் வறுமையில் வாடும் ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
எந்தவித கல்வித் தகைமையும் இல்லாத அல்லது கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தை விடவும் குறைந்த கல்வி நிலையில் உள்ளவர்கள் இந்த தொழிலுக்காக விண்ணபிக்க முடியும்.
இதன் தகைமைகளாக விண்ணப்பம் கோரப்படும் தினத்தில் 18 வயதிற்கு குறைவாகவும் 40 வயதை விட அதிகமாகவும் இருக்காமை, சமுர்த்தி நிவாரணம் பெறுகின்ற குடும்பத்தில் தொழிலற்ற உறுப்பினராக இருத்தல் என்பன கொள்ளப்படவுள்ளது.
குறித்த துறைகளுக்கான தொழில் வழங்குதல் மேலே குறிப்பிடப்பட்ட வரையறைகளுக்குள் மாத்திரம் இடம்பெறுவதோடு, தொழில் பெறுபவர்கள் எந்தவொரு தரப்பினருக்கும் பணம் அல்லது எவ்வகையான இலஞ்சமும் வழங்குவது நிராகரிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பல்துறை அபிவிருத்தி செயலணி மூலம் குறைந்த வருமானமுடைய மற்றும் தேர்ச்சி பெறாதவர்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்துவதே இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகுமென ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.