ஐ பி எல் போட்டி நடைபெறுமா? சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா

ஐ பி எல் போட்டி நடைபெறுமா? சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சாளர், துடுப்பாட்டவீரர் உட்படஅணி நிர்வாகிகள் என 13 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து கொரோனா தொற்றுக்கு இலக்கான 13 பேரும் துபாயில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது.

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் வரும் 19-ம் திகதி முதல் நவம்பர் 10-ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதையொட்டி 8 அணிகளைச் சேர்ந்த இந்திய வீரர்கள் அங்கு சென்றுள்ளனர். வெளிநாட்டு வீரர்களும் அமீரகம் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் இதற்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தீவிரமாக செய்துவரும் பிசிசிஐ நிர்வாகம் வீரர்கள், ஐபிஎல் ஊழியர்கள், பிசிசிஐ ஊழியர்கள் மற்றும் துணை பணியாளர்கள் என மொத்தம் 1,988 பேருக்கு ஓகஸ்ட் 20 முதல் 28 ஆம் திகதிவரை கொரோனா பரிசோதனை செய்தது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, இவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தி ஐபிஎல் மருத்துவக்குழு கண்காணித்துவருவதாக பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது.

இதேவேளை அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா போட்டி தொடரில் இருந்து விலகியுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சொந்த காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா நாடு திரும்பி விட்டதாகவும் அணி சிஇஒ தெரிவித்துள்ளார்