முடிவெடுப்போம் வாருங்கள்! புதிய துணைவேந்தர் பகிரங்க அழைப்பு

முடிவெடுப்போம் வாருங்கள்! புதிய துணைவேந்தர் பகிரங்க அழைப்பு

யாழ். பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு முடிவுகளும் தனிப்பட்ட நபர்களுக்காக அல்லாமல் எமது பல்கலைக்கழகத்தை நிலைநிறுத்தி அனைவருடனும் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்பட்டு பல்வேறுபட்ட கருத்துக்கள் உள்வாங்கப்படுமென யாழ். பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக கடைமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கிறேன்.

இக்கால கட்டத்தில் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டிய கடைப்பாடு எனக்கு உள்ளது.

உலகில் என்றும் இல்லாத ஒரு நிலைமை தற்போது காணப்படுகின்றது. நாட்டில் உள்ள விமான நிலையங்களே மூடப்பட்டுள்ள நிலையில் பல்கலைக்கழகத்தினை நிர்வகிப்பதென்பது சவாலான விடயமாகும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 2ஆயிரம் ஊழியர்களும் 11 ஆயிரம் மாணவர்களும் காணப்படுகின்றனர்.

நாம் அனைவரும் ஒரு குழுவாக இயங்க வேண்டும். இக்குழுவின் தலைமைத்துவம் எனக்கு தரப்பட்டுள்ளது. அதனை சரிவர மேற்கொள்வேன்.

யாழ். பரமேஸ்வரன் ஆலயத்தில் வழிபட்டு எனது கடைமைகளை பொறுப்பேற்றுள்ளேன். இந்த பல்கலைக்கழகமானது மக்களின் சொத்து. யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் யார் என்பதனை அறிய மக்கள் ஆர்வம் காட்டினர். அந்தளவிற்கு எமது பல்கலைக்கழகம் சமூகத்துடன் இணைந்ததுள்ளது.

ஆதி காலத்தில் இருந்து தமிழர்களின் சொத்தாக கல்வி காணப்படுகின்றது. கல்விப் பாரம்பரியமிக்க கலைக் கோவிலாக யாழ் பல்கலைக்கழகம் விளங்குகின்றது. இந்த பல்கலைக்கழகத்தினுள் மாணவனாக 1979ஆம் ஆண்டு காலடி எடுத்து வைத்தேன். 31 வருடங்களுக்கு பின் இன்று துணைவேந்தராக நிலைநிறுத்தியிருக்கிறது.

பொதுமக்கள், ஆர்வலர்கள், ஊடக நண்பர்களின் ஆதரவுடன் பணியினை திறம்பட மேற்கொள்ள ஆர்வமாக உள்ளேன்.

பல்கலைக்கழகத்தில் வேறுபட்ட சிந்தனைகள், பல்வேறுபட்ட கருத்துக்கள் உள்வாங்கப்படும். இங்கு ஒவ்வொரு முடிவுகளும் தனிப்பட்ட நபர்களுக்காக அல்லாமல் எமது பல்கலைக்கழகத்தை நிலைநிறுத்தி அனைவருடனும் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்படும்.

எமது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் செழிப்புற வளர்ந்து எதிர்காலச் சந்ததியினருடைய சிந்தனைக்கூடமாக மாற அனைவரும் சேர்ந்து உழைப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.