வத்தளையில் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சிக்கிய சந்தேகநபர்
வத்தளை பகுதியில் உயிருள்ள ஆயுதங்கள் அடங்கிய பொதி ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டமை தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்தப் பொதி கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தப் பொதியில் 04 T56 ரக துப்பாக்கிகள், 04 ரிவால்வர் ரக துப்பாக்கிகள், 02 பிஸ்டல் ரக துப்பாக்கிகள் மற்றும் 11 வகையான சிம் அட்டைகளும் கண்டுகிடிக்கப்பட்டுள்ளன.
விசாரணைக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட பொதியை மறைத்து வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் பொல்பகொடை, யக்கலமுல்ல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சந்தேக நபர் கல்னேவ, கல்தோட்டை மற்றும் எல்பிட்டிய காவல் பிரிவுகளில் நீதிமன்றங்களால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவர் என்பது தெரியவந்துள்ளது.
சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளுக்காக 72 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.