வடக்கு கடற்பகுதியில் மீனவர்களை முற்றுகையிட்ட அதிகாரிகள்!

வடக்கு கடற்பகுதியில் மீனவர்களை முற்றுகையிட்ட அதிகாரிகள்!

வடக்கு கடற்பிராந்தியத்தில் சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் வெளிமாவட்ட மீனவர்களை கட்டுப்படுத்த உள்ளூர் மீனவர்களின் ஒத்துழைப்புடன் யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் 3 படகுகள் மீட்கப்பட்டன.

சட்டவிரோதமான மீன்பிடி முறையான சுருக்குவலைகளை பயன்படுத்தி வடக்கு கடற் பிராந்தியத்தில் வெளிமாவட்ட மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதை அவதானித்த உள்ளூர் மீனவர்கள் யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனர்.

இதையடுத்து பருத்தித்துறை முனை கடற்றொழிலாளர் சங்கத்திற்குட்பட்ட மீனவர்களுடைய ஒத்துழைப்புடன் யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகள் நேற்றைய தினம் சட்டவிரோத மீனபிடியில் ஈடுபட்ட வெளிமாவட்ட மீனவர்களை முற்றுகையிட்டனர்.

வடமராட்சி கிழக்கு நாகர்கோயில் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட வெளிமாவட்ட மீனவர்களது நடமாட்டம் அவதானிக்கப்பட்டதற்கு அமைவாக கடல்வழியாக பருத்தித்துறை முனை மீனவர்களும் தரை வழியாக யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகளும் அங்கு விரைந்து சென்றுள்ளனர்.

நாகர்கோயில் கடற்கரை பகுதியில் மீன்பிடி நடவடிக்கைக்கு தயாராகிக் கொண்டிருந்த வெளிமாவட்ட மீனவர்கள் இவர்களை கண்டதும் படகுகளை கைவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள உதவிப் பணிப்பாளர் சுதாகரன் தலைமையில் சென்ற அதிகாரிகள் குழுவினரது முன்னிலையில் அங்கு கைவிடப்பட்டிருந்த வெளிமாவட்ட பதிவு இலக்கங்களை கொண்ட 3 படகுகள் மற்றும் அதனோடிருந்த உபகரணங்களும் கடல் வழியாக பருத்தித்துறை முனை மீனவர்களால் பருத்தித்துறைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

புத்தளம் மாவட்ட பதிவு இலக்கங்களை கொண்ட மூன்று படகுகள் மீட்கப்பட்டிருந்தன. ஒரு படகில் தடை செய்யப்பட்ட சுருக்கு வலை தொகுதி கடற் தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தயாரான நிலையில் காணப்பட்டிருந்தது. மற்றைய இரு படகுகளிலும் சட்டவிரோத மீன்பிடி தொழிலில் ஈடுபடும் உபகரணங்கள் காணப்பட்டன.

அத்துடன் இம் மூன்று படகுகளில் இரண்டு 40 குதிரைவலு வெளியிணைப்பு இயந்திரங்களும் ஒரு 25 குதிரைவலு வெளியிணைப்பு இயந்திரங்களும் பொருத்தியிருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.

இவை அனைத்தும் நேற்று இரவு 9 மணியளவில் யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள உதவிப் பணிப்பாளர் சுதாகரன் தலைமையிலான அதிகாரிகள் குழு முன்னிலையில் படகுகள் தவிர்ந்த ஏனைய கடற்றொழில் உபகரணங்கள் வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டது.

இன்றைய தினம் இவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கபட உள்ளதாக யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள உதவிப் பணிப்பாளர் சுதாகரன் தெரிவித்திருந்தார்.

இச்சம்பவத்தில் யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட்டிருந்த பருத்தித்துறை மீனவர்கள் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், கடந்தகால யுத்தத்தினால் பல்வேறு வகையில் பெரும் இழப்புகளை சந்தித்து வந்துள்ளோம். பொருளாதார ரீதியாக எமக்கு கைகொடுப்பது இந்த கடல் வளம்தான்.

போருக்கு பின்னர் அத்துமீறிய வெளிமாவட்ட மீனவர்களது சட்டவிரோத மீனபிடி முறைகளால் எமது மீன்பிடிச் சமூதாயம் சொல்லொனாத் துயரங்களை அனுபவித்து வருகிறது. எங்கோ இருந்து யாருடைய செல்வாக்கின் மூலம் எங்கட கடல் பகுதியில் உள்ள வளங்களை சுரண்டிக் கொண்டு போகும் செயற்பாட்டினால் எமது வளங்களும் சூறையாடப்பட்டு, தொழில் வளமும் சிதைவடைந்து எமது வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது என வேதனையுடன் தெரிவித்தார்கள்.