தெரிவுக்குழுக்கான உறுப்பினர்களை நியமிக்கும் நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல்..!

தெரிவுக்குழுக்கான உறுப்பினர்களை நியமிக்கும் நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல்..!

9 ஆவது நாடாளுமன்றத்தின் 'கோப்' எனப்படும் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற குழு மற்றும் 'கோபா' எனப்படும் அரசாங்க கணக்குகள் தொடர்பான குழு உள்ளிட்ட தெரிவுக்குழுக்கான உறுப்பினர்களை நியமிக்கும் நடவடிக்கை அடுத்த வாரம் இடம்பெறவுள்ளது.

இதற்கமைய பெரும்பாலும் அந்த நடவடிக்கை அடுத்த நாடாளுமன்ற அமர்வு இடம்பெறும் வியாழக்கிழமை அல்லது வெள்ளிக் கிழமை இடம்பெறலாம் என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த இரண்டு குழுக்களுடன் நாடாளுமன்ற விசேட செயற்பாடுகளுக்கான தெரிவுக்குழுவின் பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்படவுள்ளதாக அனைத்து கட்சிகளிடம் இருந்து பெயர் பட்டியல் கோரப்பட்டுள்ளது

நேற்று கூடிய நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் கோப் மற்றும் கோபா ஆகிய இரண்டு குழுக்களின் தலைமை பதவிகளை எதிர்கட்சிக்கு வழங்குமாறு ஏற்கனவே கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அந்த கோரிக்கை நேற்று கூடிய நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவால் மீண்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்த சட்டமூலம் நீதி அமைச்சர் அலி சப்ரியினல் தயாரிக்கப்படுவதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் பின்னர் அமைச்சர்களான பேராசியர் ஜீ.எல்.பீரிஸ், நிமல் ஸ்ரீபால டி சில்வ, தினேஸ் குணவர்தன, உதய கம்மன்பில உள்ளிட்ட தரப்பினர் அடங்கிய குழுவிடம் குறித்த சட்டமூலத்தை முன்வைப்பதற்கு எதிர்பார்க்கபடுவதாக தெரிய வருகின்றது

இதனையடுத்து இது தொடர்பான பரிந்துரை குறித்த குழுவின் ஊடாக அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டதன் பின்னர் அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.