வீட்டுத் திட்டங்களில் ஊழல் - சபையில் வெளிப்படுத்திய இளம் நா.உறுப்பினர்

வீட்டுத் திட்டங்களில் ஊழல் - சபையில் வெளிப்படுத்திய இளம் நா.உறுப்பினர்

மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களில் ஊழல் இடம்பெற்றுள்ளது. ஊழலில் ஈடுபட்டுள்ளவர்களை கட்டாயம் சட்டத்தின்முன் நிறுத்துவோமென இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் கருத்து வெளியிடுகையில்,

மலையகம் என்றாலே தோட்டத்தொழில் மட்டும்தான் என சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் விவசாயம் உட்பட பல தொழில்கள் அங்கு உள்ளன.

வைத்தியர்கள், சட்டத்தரணிகள், ஆசிரியர்கள் என பலர் உருவாகியுள்ளனர். எனினும், மலையகம் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. இதற்கு என்ன காரணம்? தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் அவர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படவில்லை.

ஆனால் மக்களின் உண்மையான பிரச்சினைகள் எவை என்பதை ஜனாதிபதி கண்டறிந்துள்ளார். மலையகத்திலுள்ள ஆறு பிரதான வைத்தியசாலைகள் உள்ள போதிலும் போதுமான வசதிகள் இல்லை.

அவை மிகவும் மோசமான நிலையில் உள்ளன. அதிகமான பாடசாலைகளும் மலையகத்தில் உள்ளன. பாடசாலைகளிலும் வளங்கள் முழுமையாக இல்லை. இவை தொடர்பில் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தமிழ் மக்களை ஜனாதிபதி குறிப்பிட்டு கூறவில்லையென நாம் கூறிக்கொண்டிருக்கின்றோம். பாடசாலை, வைத்தியசாலை என அனைத்துப் பிரச்சினைகளும் அனைவருக்கும் பொதுவானவையாகும். இனம், மதம், மொழி என்பது கண்ணுக்கும் காதுக்கும் மாத்திரம்தான் தேவை. வயிற்றுக்கு அவசியமில்லை.

நாடு பாரிய பொருளாதார பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளது. அடுத்த இரண்டு வருடம் பாரிய சவால்மிக்க காலமாகும்.

நாட்டின் பொருளாதாரத்தை இதற்கு மத்தியில்தான் கட்டியெழுப்ப வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்தால் மாத்திரமே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்.

சிலோன் டீ எமது பொக்கிஷமாகும். சிலோன் டீ என்ற நாமம் சரிவை சந்தித்துள்ளது. அதனை கட்டியெழுப்ப வேண்டும். சிலோன் டீக்கு அன்று இருந்த நாமம் இன்று இல்லை. இந்த விடயமும் ஜனாதிபதியின் உரையில் இடம்பெற்றது.

சிறுதோட்ட உரிமையாளர்களின் பிரச்சினைகளையும் எடுத்துரைத்துள்ளார். மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகள் சம்பந்தமாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. அவற்றை மீள் உருவாக்கம் செய்யனும். இல்லாவிட்டால் மாற்றுத் தொழில்களை அதில் உருவாக்க வேண்டும்.

மலையகத்தில் 4,000 வீடுகள் கட்டப்பட்டன என்று கூறினார்கள். ஆனால் கண்காணிப்பு குழுமூலம் ஆராய்ந்தோம். 500 வீடுகளே முழுமைப்படுத்தப்பட்டுள்ளன. ஏனையவை அரைகுறையில் உள்ளன. அரசியல் இலாபத்துக்காகவே பல திட்டங்களை கொண்டுவந்தனர்.

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் இதில் எவ்வித கவனமும் செலுத்தப்படவில்லை. ‘அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ என பழமொழியொன்று உள்ளது. எனவே, வீட்டுத் திட்டத்தில் ஊழல் செய்தவர்களை கட்டாயம் சட்டத்தின் முன் நிறுத்துவோம். என்றார்.