ஸ்ரீலங்கா அரசியல் வரலாற்றில் ஐ.தே.க இன்றி முதல் நாடாளுமன்ற அமர்வு

ஸ்ரீலங்கா அரசியல் வரலாற்றில் ஐ.தே.க இன்றி முதல் நாடாளுமன்ற அமர்வு

ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கப் பெற்றுள்ள தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு செல்லவுள்ள உறுப்பினர் யார் என்பது குறித்து இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் எவருமே இன்றி அமர்வொன்று இடம்பெறவுள்ளமை இதுவே முதன் முறையாகும்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. பொதுத் தேர்தல் நிறைவடைந்து இரு வாரங்கள் கடந்துள்ள போதிலும் ஐக்கிய தேசிய கட்சி தனக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் மூலம் யாரை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவது என்பது குறித்து இறுதி தீர்மானத்தை அறிவிக்கவில்லை.

இறுதி கட்டத்திலேனும் ஏதேனும் தீர்மானங்கள் எடுக்கப்படுமா என்று பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது,

அதற்கு அவர், தேசியப் பட்டியல் ஊடாக யாரை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவது என்று இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. எதிர்வரும் வாரங்களில் இதற்கான தீர்வினைக் காண எதிர்பார்த்துள்ளோம். இறுதி தீர்மானம் எடுத்ததன் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.

கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஸ்திரமானதொரு தீர்மானம்மேற்கொள்ளப்படும் என்று பதிலளித்தார்.

எவ்வாறிருப்பினும் இலங்கையில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் முதன் முறையாக ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து ஒரு உறுப்பினரேனும் மக்களால் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படாமை இதுவே முதல் தடவையாகும்.

அதே போன்று ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு பிரதிநிதி கூட நாடாளுமன்றத்தில் கலந்து கொள்ளாமல் இடம்பெறப் போகும் முதலாவது அமர்வும் இதுவாகும்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கப் பெற்றுள்ள தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்லும் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் ஐ.தே.க. சார்பில் ஒரேயொரு உறுப்பினர் பங்குபற்றும் முதலாவது அமர்வாகவும் நாளைய நாடாளுமன்ற அமர்வு அமைந்திருக்கும்.