கோட்டாபய அரசுடன் நெருங்கிச் செயற்படத் தயார் -இந்தியா அதிரடி அறிவிப்பு
கோட்டாபய தலைமையிலான அரசாங்கத்துடன் நெருங்கிச்செயற்படத் தயாரென அறிவித்துள்ளது இந்தியா.
புதிய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றுள்ள தினேஷ் குணவர்தனவிற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது வாழ்த்தைத் தெரிவித்திருப்பதுடன், இந்தியாவின் 'அண்மைய நாட்டிற்கு முன்னுரிமை' கொள்கையின் கீழ் இலங்கை - இந்திய நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை அடுத்தகட்டத்திற்குக் கொண்டுசெல்வதற்காக வெளிவிவகார அமைச்சுடன் மிகவும் நெருங்கிச்செயற்படத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட தினேஷ் குணவர்தன நேற்று திங்கட்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், அன்றைய தினமே இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாங்லே அவரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.
இச்சந்திப்பின்போது இந்திய வெளியுறவு அமைச்சரின் வாழ்த்துக்கடிதத்தையும் தினேஷ் குணவர்தனவிடம் கையளித்த இந்திய உயர்ஸ்தானிகர், இருநாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதில் அண்மைய பொதுத்தேர்தலில் புதிய அரசாங்கம் பெற்றுக்கொண்டிருக்கும் உறுதியான மக்களாணை முக்கிய பங்கை வகிக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.