யாழ்ப்பாணம் உட்பட வட மாகாணம் தொடர்பில் கோட்டாபய பிறப்பித்துள்ள உத்தரவு!
தற்போது ஏற்பட்டுள்ள நிலையில் வட மாகாணத்தில் அனைத்து கடைகளும் இரவு பத்து மணிவரை திறந்திருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை மாவட்ட செயலகத்தில், வடக்கு மாகாண ஆளுநர் சார்லஸ், பொலிஸார், இலங்கை போக்குவரத்து சபை, தனியார் பேருந்து ஊழியர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஆகியோருடன் இடம்பெற்ற சந்திப்பில் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போதே யாழ்ப்பாணம் உட்பட வட மாகாணத்தில் உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் ஆடை கடைகள், உணவகங்கள் மற்றும் மருந்தகங்கள் உட்பட அனைத்து கடைகளும் இரவு 10 மணி வரை திறந்த நிலையில் வைத்திருக்குமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வியாபார நிலையங்களை திறந்து வைத்திருப்பதன் மூலம், வட மாகாணத்தின் இயல்புநிலை பராமரிக்கப்பட்டு வருவதனை தெளிவுபடுத்துவதற்கும் வர்த்தக வாய்ப்புகளை அதிகரிப்பதுமே இந்த திட்டத்தின் நோக்கம் என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் கே.மகேசன் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் போக்குவரத்து சேவைக்கும் பயணிகளின் அதிகரிப்பு ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, தற்போது அதிகமான பேருந்து சேவைகள் இரவு 8 மணியளவில் நிறுத்தப்படும் நிலைமையில், இரவு நேரத்தில் சேவையை பராமரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.