வங்கக்கடலில் மீண்டும் உருவாகும் தாழமுக்கம்! நவம்பர் 15ஆம் திகதி புயலாக வலுப்பெற வாய்ப்பு!

வங்கக்கடலில் மீண்டும் உருவாகும் தாழமுக்கம்! நவம்பர் 15ஆம் திகதி புயலாக வலுப்பெற வாய்ப்பு!

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை அண்மித்த அந்தமான் கடற்பகுதிகளில் மீண்டும் வளிமண்டல தளம்பல் நிலை ஒன்று உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதியளவில் குறித்த கடற்பகுதிகளில் வளிமண்டல தளம்பல் நிலை உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாழமுக்கமாக வலுப்பெற வாய்ப்பு!

இந்த வளிமண்டலத் தளம்பல் நிலையானது நவம்பர் 13ஆம் திகதியளவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நவம்பர் 15ஆம் திகதியளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதற்கான சாத்தியக்கூறுகளும் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை!

இதனைக் கருத்தில் கொண்டு, குறித்த கடற்பிராந்தியங்களில் மீன்பிடி மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் பலநாள் மீன்பிடிப் படகுகள் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் விசேட அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், இன்று (நவம்பர் 8) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, எதிர்வரும் நாட்களில் வங்கக்கடலில் ஏற்படக்கூடிய வானிலை மாற்றங்கள் தொடர்பில் பொதுமக்களும் மீனவர்களும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.