யாழ் உள்ளிட்ட பகுதிகளில் தொடரும் gas தட்டுப்பாடு...! விசாரணைக்கு உத்தரவிட்ட பிரதி அமைச்சர்
சந்தைக்கு விநியோகிக்கப்படும் எரிவாயு சிலிண்டர்கள் குறுகிய காலத்தில் இவ்வாறு தட்டுப்பாடு ஏற்படுவது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக லிட்ரோ சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்காக விற்பனை நிலையங்களுக்கு செல்லும் போது எரிவாயு சிலிண்டர்கள் இல்லை என நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த நிலைமை காரணமாக நகரப்புறங்களில் வாழும் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
தட்டுப்பாடுமின்றி சந்தையில்
இந்நிலையில், நாட்டில் சமயல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மக்கள் மத்தியில் பாரிய சந்தேகங்கள் உருவாகியுள்ள நிலையில் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் ஆர்.எம். ஜெயவர்த்தன விளக்கமளித்துள்ளார்.

எரிவாயு கப்பலொன்று நாட்டை வந்தடைவதில் தாமதம் ஏற்பட்டமையே இதற்கு காரணம் என்றும் கூறியுள்ளார்.
எரிவாயு தொகையை இறக்குவதிலும் மூன்று நாட்களாக ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக 250,000 முதல் 300,000 வரையிலான வீட்டுப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு உருவாகியுள்ளது.
இந்த தட்டுப்பாட்டை எதிர்வரும் 7 முதல் 8 நாட்களுக்குள் முழுமையாகத் தீர்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், சந்தைக்கு விநியோகிக்கப்படும் எரிவாயு சிலிண்டர்கள் குறுகிய காலத்தில் இவ்வாறு தட்டுப்பாடு ஏற்படுவது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவுறுத்தல் வழங்குவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ச்சியாக சந்தைக்கு
குறித்த எரிவாயு கப்பல் எதிர்பார்க்கப்பட்ட நேரத்தை விட இரண்டு நாட்கள் தாமதமாகவே வந்தடைந்தது. இதன் பின்னர் எரிவாயுவை இறக்குவதிலும் விநியோகப் போக்குவரத்து நடவடிக்கைகளிலும் மேலும் சில நாட்கள் தாமதம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் ஒக்டோபர் 23 ஆம் திகதி காலை முதல் தினசரி 100,000 எண்ணிக்கையிலான 12.5 கிலோகிராம் சிலிண்டர்களைத் தொடர்ச்சியாக சந்தைக்கு விநியோகித்து வருகின்றது.
வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் தீர்ந்துபோகக்கூடும் என்ற போதிலும் வீட்டுப் பயன்பாட்டிற்காக வழங்கப்படும் சிலிண்டரொன்று பொதுவாக இரண்டரை முதல் மூன்று மாதங்கள் வரை நீடிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.