இருவேறு விபத்துகளில் இருவர் உயிரிழப்பு!
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் கலேவெல மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இரு வேறு விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்புள்ளை - குருநாகல் வீதியின் இப்பிங்கட்டுவ பகுதியில் நேற்று (17) இரவு குருநாகல் திசையை நோக்கிச் சென்று கொண்டிருந்த சைக்கிள் ஒன்று, வலதுபுறமாகத் திரும்ப முற்பட்ட வேளையில், எதிர்த்திசையில் வந்த தனியார் பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சைக்கிளில் பயணித்த நபர் தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தம்புள்ளை பகுதியைச் சேர்ந்த 64 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, திருகோணமலை பேருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று மாலை மற்றுமொரு பேருந்து விபத்து இடம்பெற்றுள்ளது.
கல்முனையிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று, பயணிகளை இறக்கிவிட்டு வாகனத்தைத் திருப்புவதற்கு முற்பட்ட போது, பேருந்துக்கு முன்னால் வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி மீது மோதியுள்ளது.
காயமடைந்த பாதசாரி திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.