போதையால் சீரழியும் யாழ்ப்பாணம் - முளைக்கும் புதிய மதுபான நிலையங்கள் - வெடித்த போராட்டம்

போதையால் சீரழியும் யாழ்ப்பாணம் - முளைக்கும் புதிய மதுபான நிலையங்கள் - வெடித்த போராட்டம்

யாழ். மாவட்டத்தில் நான்கு புதிய மதுபான விற்பனை நிலையங்களை அமைப்பதற்கான அனுமதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் யாழ். வலிகாமம் மேற்கு சங்கானை பகுதியில் புதிதாக மதுபானசாலை திறப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டமானது இன்று (09) சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

 

அனுமதியை ரத்து 

புதிய மதுபானசாலைகள் திறக்கப்படுவதால் சமூகப் பிரச்சினைகள், குடும்ப வன்முறைகள் அதிகரிப்பதுடன், மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படலாம் எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

மதுபானசாலை அமைக்கப்படவுள்ள இடத்திற்கு அருகில் பாடசாலை, பிரதேச செயலகம், சந்தைகள் மற்றும் கடைத்தொகுதிகள் அமைந்துள்ளதால், அவற்றின் செயற்பாடுகள் பாதிக்கப்படக்கூடும் என்றும் சுட்டிக்காட்டினர்.

வலிகாமம் மேற்கு பகுதியில் ஏற்கனவே மூன்று மதுபான நிலையங்கள் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

போராட்டத்தின் பின்னர் பேரணியாகப் பிரதேச செயலகத்திற்குச் சென்ற மக்கள், புதிய மதுபானசாலைக்கான அனுமதியை ரத்து செய்யக் கோரி பிரதேச செயலரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.