யாழில் வெ*ட்டி படு*கொ*லை செய்யப்பட்ட குடும்பஸ்தர்: பிரதான சந்தேகநபர் கைது
யாழில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன் பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகி இருந்தார்.
இந்தநிலையில் நேற்றைய தினம் (14-09-2026) அவர் காவல்துறையினரிடம் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வாள் வெட்டு தாக்குதல்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வடமராட்சி கிராமக்கோடு சந்திக்கு அருகாமையில் கடந்த 09 ஆம் திகதி இரவு இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் துன்னாலை பகுதியை சேர்ந்த ஜெயசீலன் ஜெனிதன் (வயது 33) என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.

துன்னாலை பகுதியை சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையில் நீண்ட காலமாக பகைமை நீடித்து வந்த நிலையில் , மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் அடங்கிய குழு ஜெனிதன் என்பவர் மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டனர்.
அதில் ஜெனிதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் முல்லைத்தீவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த 11ஆம் திகதி அங்கு விரைந்த காவல்துறையினர் மூவரையும் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தொடர்ந்து தலைமறைவாகியிருந்த நிலையில், நேற்றைய தினம் காவல்துறையினரிடம் சரணடைந்ததை அடுத்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை பருத்தித்துறை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.