நல்லூரில் 45 பவுண் நகைகள் திருட்டு : சிக்கிய பெண்ணொருவருக்கு விளக்கமறியல்
யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர் திருவிழாவின் போது தாலிக்கொடியை திருடிய குற்றச்சாட்டில் கைதான கொழும்பைச் சேர்ந்த பெண் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தேர் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பெண்ணொருவரின் தாலிக்கொடி அறுக்கப்பட்டமை தொடர்பில், ஆலயச் சூழலில் கடமையில் இருந்த காவல்துறையினருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.
இதனையடுத்து துரிதமாக செயற்பட்ட காவல்துறையினர், ஆலய சூழலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவின் உதவியுடன் தாலிக்கொடி அறுத்த பெண்ணை அடையாளம் கண்டு கைது செய்தனர்.
விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பெண்ணிடம் இருந்து அறுக்கப்பட்ட தாலிக்கொடி மீட்கப்பட்டது.அதனையடுத்து குறித்த பெண்ணை யாழ் நீதவான் நீதிமன்றில் காவல்துறையினர் முற்படுத்திய நிலையில் அப்பெண்ணை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.

இதேவேளை நல்லூர் ஆலய தேர் மற்றும் தீர்த்தத் திருவிழாவின் போது, சுமார் 45 பவுண் தங்க நகைகள் களவாடப்பட்டுள்ள நிலையில், ஆலய சூழலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்தநிலையில், சில சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளதுடன் அவர்களை கைது செய்வதற்கு காவல்துறையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.