காலி, கண்டி, யாழ் வரை விரிவடையும் மெட்ரோ பேருந்து சேவைகள்

காலி, கண்டி, யாழ் வரை விரிவடையும் மெட்ரோ பேருந்து சேவைகள்

மெட்ரோ பேருந்து சேவையை மேல் மாகாணத்திற்கு அப்பால் விரிவுபடுத்தி காலி, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

இன்று (07) கடவத்தை மெட்ரோ டிப்போ முனையத்தின் செயல்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 

இம்மாதத்திற்குள் மெட்ரோ பேருந்து சேவையின் பேருந்துகளின் எண்ணிக்கையை 122 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மேலும் 50 பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். 

அதன்படி, இந்த ஆண்டின் இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டின் முற்பகுதியில் மெட்ரோ பேருந்து சேவையை 172 பேருந்துகள் வரை விரிவாக்க எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார். 

மெட்ரோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து பேருந்து சேவையை நடத்துவதற்கு எதிர்காலத்தில் தனியார் துறைக்கும் வாய்ப்பளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். 

இதற்கிடையில், நாட்டின் நகர போக்குவரத்து துறையை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், மெட்ரோ பேருந்து சேவைக்கு தேவையான உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, Clean Sri Lanka செயலகம், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் லங்கா மெட்ரோ டிரான்சிட் தனியார் நிறுவனம் ஆகியன இணைந்து மேற்கொண்டு வருகின்றன. 

இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கடவத்தை மெட்ரோ டிப்போ முனையத்தின் செயல்பாடுகள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. 

மெட்ரோ திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட முதலாவது டிப்போ முனையம் கடந்த 04 ஆம் திகதி பத்தரமுல்லை, தலங்கம பகுதியில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. 

மெட்ரோ பேருந்து சேவையின் நிர்வாகம், செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு பணிகளை வலுப்படுத்துவதற்காக முதற்கட்டமாக தலங்கம, கடவத்தை, ஏகல மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு 04 புதிய டிப்போக்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

தற்போது மெட்ரோ பேருந்து சேவையின் 01 ஆம் இலக்க வழியின் கீழ் மாகும்புரவிலிருந்து மகரகம ஊடாக கடவத்தை வரை சேவைகள் இயங்கி வருவதுடன், அந்த வழித்தடத்திற்கு 15 புதிய மெட்ரோ பேருந்துகளை ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் பேருந்து நிறுத்தங்கள், ஒருங்கிணைந்த கட்டண முறைகள், டிப்போ வசதிகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட ஏனைய போக்குவரத்து சேவைகளுடனான தொடர்பை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

அத்துடன், பொதுப் போக்குவரத்து சேவையில் முக்கிய பங்காற்றும் இலங்கை போக்குவரத்து சபையை (CTB) மேலும் வலுப்படுத்துவதற்காக, இந்த ஆண்டின் இறுதிக்குள் 600 புதிய குளிரூட்டப்பட்ட (A/C) பேருந்துகளை இறக்குமதி செய்யவும், இலங்கை போக்குவரத்து சபையின் நிதியைப் பயன்படுத்தி மேலும் 200 பேருந்துகளைக் கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.