அழிவின் விளிம்பில் இருந்த காகாபோ கிளிகள் எண்ணிக்கை 325 ஆக உயர்வு: 75 ஆண்டுகளில் இல்லாத வரலாற்றுச் சாதனை

அழிவின் விளிம்பில் இருந்த காகாபோ கிளிகள் எண்ணிக்கை 325 ஆக உயர்வு: 75 ஆண்டுகளில் இல்லாத வரலாற்றுச் சாதனை

அழிவின் விளிம்பில் உள்ள நியூசிலாந்தின் அபூர்வ பறவை இனமான காகாபோ (Kakapo), வனவிலங்குப் பாதுகாப்பு வரலாற்றில் மாபெரும் மைல்கல்லை எட்டியுள்ளது.

அழிவின் விளிம்பில் இருந்த நியூசிலாந்தின் அரிய வகை பறவை இனமான 'காகாபோ' (Kakapo), வனவிலங்குப் பாதுகாப்பு வரலாற்றில் மாபெரும் மைல்கல்லை எட்டியுள்ளது. நவீன பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்ட பிறகு, முதன்முறையாக இவற்றின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை தற்போது 325 ஆக உயர்ந்துள்ளது. 2026-ஆம் ஆண்டு இனப்பெருக்கப் பருவத்தில் மட்டும் 90 குஞ்சுகள் புதிதாகப் பிறந்ததே இந்த அபார வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகும். சுமார் 75 ஆண்டுகளில் இந்த இனப் பறவைகளின் எண்ணிக்கை 300-ஐத் தாண்டுவது இதுவே முதல் முறை எனக் கருதப்படுகிறது.

4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகே புதிய இனப்பெருக்கப் பருவம் கைகொடுத்துள்ளது. காகாபோ கிளிகள் வழக்கமாக 2 முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இனப்பெருக்கம் செய்யும் இயல்புடையவை. 'ரிமு' (Rimu) மரங்களில் பழங்கள் கொத்துக் கொத்தாகக் காய்த்துத் தொங்கும் 'மாஸ்ட்' (Mast) பருவத்தோடு இவற்றின் இனப்பெருக்க சுழற்சி நெருங்கிய தொடர்புடையது. 2026-ல் சீசனில் 90 குஞ்சுகள் பொரித்ததன் மூலம், காகாபோ மீட்புத் திட்ட வரலாற்றிலேயே இது சாதனை இனப்பெருக்கப் பருவமாகப் பதிவாகியுள்ளது. இதில் கடைசியாகப் பிழைத்து வளர்ந்த குஞ்சு செப்டம்பர் 1 அன்று 150 நாட்களை நிறைவு செய்தது. காடுகளில் சுயமாக வாழும் நிலையை எட்டியதையடுத்து, அது அதிகாரப்பூர்வ மக்கள் தொகைக் கணக்கீட்டில் சேர்க்கப்பட்டது.

இந்த மீட்சி ஒரே இரவில் நடந்துவிடவில்லை; பல தசாப்த கால கடின உழைப்பாகும். 1995-ஆம் ஆண்டு 'காகாபோ மீட்புத் திட்டம்' (Kakapo Recovery Programme) தொடங்கப்பட்டபோது, உலகம் முழுவதிலும் வெறும் 51 காகாபோ பறவைகள் மட்டுமே எஞ்சியிருந்தன. அதில் பெண் பறவைகளின் எண்ணிக்கை வெறும் 20 மட்டுமே. அதன்பின்னர், வனப்பாதுகாப்புக் குழுக்களும் 'நை தஹு' (Ngāi Tahu) பழங்குடி அமைப்பும் இணைந்து 13 இனப்பெருக்கப் பருவங்களைக் கடந்து இவற்றின் எண்ணிக்கையை மீட்டெடுத்துள்ளன. இதற்கு முன்னர் 2022-ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 252 பறவைகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தன.

காகாபோ பறவைகள் மிகவும் விசித்திரமானவை. இவற்றால் பறக்க முடியாது; இரவில் மட்டுமே இரை தேடும் என்பதால் வெளியிலிருந்து வந்த கொன்றுண்ணி விலங்குகளுக்கு இவை எளிதில் பலியாகின்றன. மற்ற பறவைகளை விட மிக மெதுவாகவே இனப்பெருக்கம் செய்கின்றன. குஞ்சுகளைப் பெண் பறவைகள் மட்டுமே தனியாக வளர்க்கின்றன. 'ரிமு' மரத்தின் பழங்கள் கிடைப்பதை மட்டுமே இவற்றின் இனப்பெருக்கம் சார்ந்துள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான பறவைகளே எஞ்சியிருந்ததால், இவற்றின் மரபணு வேறுபாடு (Genetic diversity) மிகவும் குறைவாக உள்ளது. இது கருவுறுதல் மற்றும் முட்டையிலிருந்து குஞ்சு பொரிக்கும் விகிதத்தில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

பல ஆண்டுகளாக வனவிலங்கு ஆர்வலர்கள் ஒவ்வொரு பறவைக்கும் தீவிரமான நேரடிப் பராமரிப்பு உதவிகளை வழங்கி வந்தனர். ஆனால் தற்போது எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இத்தகைய நேரடித் தலையீடுகளைக் குறைக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளனர். 2026-ல், முட்டைகள் மற்றும் குஞ்சுகளை அடிக்கடி பரிசோதிப்பதைக் குறைத்தல், சில பகுதிகளில் கூடுதல் செயற்கை உணவு வழங்குவதைக் குறைத்தல் மற்றும் நவீன ரிமோட் கூண்டு கண்காணிப்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் போன்ற புதிய நடைமுறைகளைச் சோதித்தனர். தீவிர மனிதப் பராமரிப்பை நிரந்தரமாகச் சார்ந்திருக்காமல், இயற்கையிலேயே தங்களைத் தாங்களே காத்துக்கொள்ளும் ஆரோக்கியமான பறவைக் கூட்டத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

முழுமையாக இல்லை. எண்ணிக்கை 325-ஐ எட்டியிருந்தாலும், காகாபோ பறவைகள் இன்னமும் மிகக் கடுமையான 'அழிவின் விளிம்பில் உள்ள' (Critically endangered) இனமாகவே தொடர்கின்றன. அடுத்த இனப்பெருக்கப் பருவம் எப்போது நிகழும் என்பதை நோக்கிப் பாதுகாப்புக் குழுவினர் நகர்ந்துள்ளனர். கணிப்புகளின்படி அடுத்த சீசன் 2028-ல் நிகழக்கூடும் எனக் கருதப்படுகிறது. இருப்பினும், 3 தசாப்தங்களுக்கு முன்பு வெறும் 51 பறவைகளாகச் சுருங்கிப் போன ஒரு இனம், முக்கால் நூற்றாண்டுக்குப் பிறகு 300 என்ற எண்ணிக்கையைக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது வனவிலங்குப் பாதுகாப்புத் துறையில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.