மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!
செம்மணி மனிதப் புதைகுழியில் மழை அங்கியை ஒத்த ஆடையுடன் கூடிய சிறுவன் ஒருவரின் எலும்புக்கூடு அடையாளம் காணப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்களுக்கு முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. அதனடிப்படையில் 41 ஆவது நாளான நேற்று (23) 7 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளில் 9 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் நேற்றைய அகழ்வின் போது மூன்று எலும்புக் குவியல்கள் அடையாளம் காணப்பட்டதுடன், ஆணிகளும் சிமெந்துத் துண்டு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில், செம்மணி மனிதப் புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்கள் என இதுவரையில் மொத்தம் 95 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை 478 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 464 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன்,
செம்மணிப் புதைகுழிக்குள் அடையாளம் காணப்பட்ட 467 ஆவது எலும்புக்கூடு இதுவரை இல்லாதவாறு மிகவும் வித்தியாசமான முறையில் காணப்படுகின்றது. அதில் சவப்பெட்டியின் அடையாளமும், மழைக்காலத்தில் பயன்படுத்தப்படும் மழை அங்கி (Raincoat) ஒன்றும், காலின் பகுதியில் காலுறையும் (Socks) காணப்படுகின்றன.
எனவே, இது சட்டரீதியாக அடக்கம் செய்யப்பட்டதா என்ற ஐயம் எழுந்துள்ளது. நீதிமன்றம் இது குறித்து ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இது தொடர்பான மேலதிக விபரங்களை இன்று (24) தெளிவாகக் கூற முடியும் என தெரிவித்தார்.
-யாழ். நிருபர் பிரதீபன்-