அமைதியை இழந்த பலாலி மக்கள் வீதியில்....! மாறும் போராட்ட வடிவம்

அமைதியை இழந்த பலாலி மக்கள் வீதியில்....! மாறும் போராட்ட வடிவம்

தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு கோரி அமைதிவழியில் தொடர்ந்து போராடிவரும் வலி வடக்கு பலாலி மக்கள், தமது போராட்ட வடிவத்தை மாற்றி வீதிக்கிறங்கி தமது வலிகளையும் கோரிக்கைகளையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் (16-08-2026) இடம்பெற்றுள்ளது.

உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட தமது பூர்வீக நிலங்கள் இதுவரை முழுமையாக மீள வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து, பலாலி மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

 

போராட்டக்காரர்கள்

இந்நிலையில், நேற்று 9ஆவது வாரமாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், கடந்த வாரம் அறிவித்திருந்தபடி மக்கள் தமது போராட்ட வடிவத்தை மாற்றி வீதியில் இறங்கினர்.

 

அமைதியை இழந்த பலாலி மக்கள் வீதியில்....! மாறும் போராட்ட வடிவம் | Palaly Residents Protest For Ancestral Lands

பலாலி செபஸ்தியார் ஆலயம் அமைந்திருந்த பகுதியிலிருந்து கறுப்பு உடையணிந்து, கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு ஊர்வலமாக புறப்பட்ட போராட்டக்காரர்கள், பலாலிச் சந்தியை சென்றடைந்தனர்.

அங்கு வீதிச் சோதனைச் சாவடிக்கு முன்பாக ஒன்றுகூடி, தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தை வலுப்படுத்தினர்.

 

பூர்வீக நிலங்கள்

இதன்போது, தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டக்காரர்கள் பொலிஸாருடன் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போராட்டக் களத்தில் சற்று பதற்றமான சூழல் ஏற்பட்டது.

எனினும், போராட்டக்காரர்கள் அமைதியை கடைப்பிடித்து தமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்ததுடன் வழமையான நேரம் வரை போராட்டக் களத்தில் நிலைத்திருந்தனர்.

அமைதியை இழந்த பலாலி மக்கள் வீதியில்....! மாறும் போராட்ட வடிவம் | Palaly Residents Protest For Ancestral Lands

பல ஆண்டுகளாக அமைதிவழியில் போராடி வரும் பலாலி மக்களின் போராட்ட வடிவம் தற்போது படிப்படியாக மாறி வருகின்றது.

மேலும் தமது பூர்வீக நிலங்களை மீளப்பெறும் வரை போராட்டத்தை தொடரப் போவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.