யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் - மாபெரும் கலாசார மற்றும் உணவுத் திருவிழா

யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் - மாபெரும் கலாசார மற்றும் உணவுத் திருவிழா

வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 'யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026 – கலாசார மற்றும் உணவுத் திருவிழா' நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் ஆரம்பமானது.

யாழ்ப்பாணத்தின் தனித்துவமான கலாசாரம், பாரம்பரியம், கலை மற்றும் உணவுப் பண்பாட்டை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவிகளுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்த உணவு திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்வின் ஆரம்பத்தில், யாழ்ப்பாணம் பொதுநூலக முன்றலில் இருந்து கலாசாரப் பவனியும் பழைய மோட்டார் வாகனங்களின் பவனியும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மேடை நிகழ்வுகளில் யாழ்ப்பாணத்தின் பாரம்பரியத்தையும் கலைப் பண்பாட்டையும் பிரதிபலிக்கும் பல்வேறு கலாசார நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.

இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன் மற்றும் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன், வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜே.விவேகானந்தன் உள்ளிட்டவர்கள் விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

'யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026 – கலாசார மற்றும் உணவுத் திருவிழா' நேற்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பமான உணவு திருவிழா , நாளைய தினம் திங்கட்கிழமையும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறவுள்ளது.

மாலை நேரங்களில் பல்வேறு கலை மற்றும் கலாசார மேடை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.