டிக்டாக் மூலம் பழகி மதுரை இளைஞரிடம் 97 ஆயிரம் ரூபாய் பறித்த திருப்பூரைச் சேர்ந்த இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
தனது முகத்தைக் காட்டாமல் காதல் ரசம் சொட்டும் வீடியோக்களை தனது டிக்டாக் கணக்கில் பகிர்ந்து, அதில் சிக்கும் இளைஞர்களிடம் பணம் பறித்து மோசடியில் ஈடுபட்டு வந்த இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர். பெண்கள் பெயரில் டிக்டாக்கில் கணக்கு தொடங்கி பல ஆண்கள் மோசடி செய்து வந்த நிலையில், ஒரு பெண்ணே போலியான பெயரில், அழகான பெண்ணின் படத்தை புரொஃபைல் போட்டாவாக வைத்து மோசடியில் ஈடுபட்டு சிக்கியுள்ளார்.
மதுரை எல்லீஸ் நகர் போடி லைன் சூர்யா அப்பார்மென்டில் வசிப்பவர் 23 வயதான ராமச்சந்திரன். இவர் மதுரையில் ஒரு தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். ராமச்சந்திரன் பொழுதுபோக்கிற்காக டிக்டாக் மற்றும் முகநூல் செயலிகளைப் பயன்படுத்தி வந்துள்ளார். ஊரடங்கால் கல்லூரி விடுமுறையில் உள்ளதால் வீட்டுக்குள் முடங்கியிருந்த ராமச்சந்திரன் டிக்டாக் செயலியிலேயே மூழ்கிக் கிடந்துள்ளார்.
இந்நிலையில், டிக்டாக் செயலியில் அம்முக்குட்டி என்ற பெயரில் ஒரு பெண் ராமச்சந்திரனுக்கு அறிமுகமாகியுள்ளார். பின்னர், முகநூல் முகவரியைப் பகிர்ந்துகொண்டு சாட் செய்யத் தொடங்கி உள்ளனர்.
ஒரு கட்டத்தில் அம்முக்குட்டியிடம் சாட்டிங் செய்வதே ராமச்சந்திரனின் முழுநேர வேலையாக மாறியுள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட அம்முக்குட்டி தனது பெற்றோருக்கு உடல்நிலை பிரச்னை எனவும், மருத்துவச் செலவுக்குப் பணம் தேவை எனவும் கூறியுள்ளார்.
இதை நம்பிய ராமச்சந்திரன் அந்தப் பெண் கொடுத்த வங்கிக் கணக்குக்கு 97 ஆயிரம் ரூபாய் வரை பணத்தை அனுப்பி வைத்துள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட அந்த பெண் ராமச்சந்திரன் உடன் டிக்டாக், முகநூல் மூலமான தொடர்பைத் துண்டித்துள்ளார்.
சந்தேகமடைந்த ராமச்சந்திரன், தன்னிடமிருந்து பணம் பறிக்கவே அந்தப் பெண் நாடகமாடி ஏமாற்றியுள்ளார் என்பதை அறிந்துள்ளார். இதையடுத்து தன்னிடம் நட்பாகப் பழகி 97 ஆயிரம் ரூபாய் ஏமாற்றி விட்டதாக மதுரை எஸ்.எஸ். காலனி போலீசில் ராமச்சந்திரன் புகார் அளித்தார்.ராமச்சந்திரன் அளித்த புகாரைத் தொடர்ந்து அம்முக்குட்டி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்தனர். மதுரை காவல் ஆணையர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
போலீசார் விசாரணையில், அந்த டிக்டாக் செயலியில் இருந்த அம்முக்குட்டி என்ற பெண்ணின் பெயர் போலி என்பது தெரிய வந்தது. இதையடுத்து, ராமச்சந்திரன் பணம் அனுப்பிய வங்கிக் கணக்கை வைத்து அந்தப் பெண் திருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், அவரது உண்மையான பெயர் சுசி என்பதும் தெரிய வந்தது.
திருப்பூர் அருகே ஆலங்காடு, வீரபாண்டி அருகில் தனது வீட்டில் பதுங்கியிருந்த இளம் பெண் சுசியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து டிக்டாக், முகநூல் மூலம் மோசடி செய்ய பயன்படுத்திய விலை உயர்ந்த செல்போனைப் பறிமுதல் செய்தனர்.
அந்தப் போனை ஆய்வு செய்தபோது, பல்வேறு பெயர்களில் டிக்டாக், முகநூல் மூலம் பல இளைஞர்களை தனது வலையில் வீழ்த்தி பணம் பறித்து வந்தது தெரிய வந்தது. ஆடம்பர வாழ்க்கைக்காக இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டதாகக் கூறிய சுசியை, நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சுசி வேறு யாரிடமெல்லாம் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். டிக்டாக், முகநூல் மூலம் பணத்தை இழந்தவர்கள் முன்வந்து புகார் கொடுத்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.