ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடும்
உலகில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கடல் வழிகளில் ஒன்றான 'ஹோர்முஸ் நீரிணையின்' (Strait of Hormuz) கட்டுப்பாட்டை அமெரிக்கா தன்வசப்படுத்த வாய்ப்புள்ளதாகவும், இந்த முக்கிய நீர்வழியைப் பாதுகாத்து நிர்வகிப்பதற்குக் பிரதிபலன் பெறும் நாடுகள் அமெரிக்காவிற்குப் பணம் செலுத்த வேண்டும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
"ஃபோக்ஸ் அண்ட் ஃப்ரெண்ட்ஸ்" (Fox & Friends) என்ற வெளிநாட்டு ஊடக நிகழ்ச்சியில் தொலைபேசி மூலம் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த டிரம்ப், "நாங்கள் அந்த நீரிணையை எங்கள் வசம் எடுத்து அதன் கட்டுப்பாட்டைச் செயல்படுத்த முடியும்.
நாங்கள் அதன் பாதுகாவலராக மாறுவோம். ஒருவேளை அதை 'நீரிணையின் காவல் தேவதை' (Guardian Angel) என்று கூட அழைக்கலாம். அத்துடன் நாங்கள் செய்யும் அந்தச் சேவைக்காக எங்களுக்குப் பணம் செலுத்தப்பட வேண்டும்" என்று கூறினார்.
உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும்பகுதி கொண்டு செல்லப்படும் முக்கியப் பாதையான ஹோர்முஸ் நீரிணை, தற்போது அமெரிக்க-ஈரான் மோதலின் முக்கிய மையப்புள்ளியாக மாறியுள்ளது.
ஈரான் இந்த கடல் வழியை முற்றுகையிட்டுள்ளதால் உலகச் சந்தையில் எரிசக்தி விலைகள் உயர்ந்துள்ளன, அத்துடன் உலகளாவிய பணவீக்கம் குறித்த அச்சமும் ஏற்பட்டுள்ளது.
"நாங்கள் அதைப் பாதுகாப்போம். அதற்காக எங்களுக்குப் பெருமளவு பணம் கிடைக்க வேண்டும். ஏனைய நாடுகள் மிகவும் செல்வந்த நாடுகள். அவர்கள் எங்கள் பக்கத்தில் இருக்கிறார்கள். எனவே, நாங்கள் இதைச் சும்மா செய்வோம் என்று எங்களிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது" என்று ட்ரம்ப் மேலும் கூறினார்.
அனுமதியின்றி கப்பல் போக்குவரத்து இடம்பெற்றதாகக் கூறி ஈரான் கடந்த சனிக்கிழமையன்று இந்த கடல் வழியை மூடியதுடன், அங்கு அமைதியும் ஸ்திரத்தன்மையும் ஏற்படும் வரை போக்குவரத்துக்கான அனுமதிகள் வழங்கப்பட மாட்டாது என்றும் அறிவித்திருந்தது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த ட்ரம்ப், "நாங்கள் அவர்களுடன் ஒரு உடன்பாட்டிற்கு வந்திருந்தோம். ஆனால் அவர்கள் அதை மீறினர். அவர்கள் எப்போதும் ஒப்பந்தங்களை மீறுகிறார்கள். நாங்கள் இதுவரை அவர்களுடன் சுமார் 10 ஒப்பந்தங்களைச் செய்துள்ளோம். எனவே இம்முறை நாங்கள் அவர்கள் மீது மிகவும் பலமாகத் தாக்குதல் நடத்துவோம்" என்றார்.
கடந்த வார இறுதி முதல் அமெரிக்க மற்றும் ஈரானியப் படைகளுக்கு இடையே கடுமையான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதுடன், வளைகுடாப் பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதை ஈரானும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நிலைமைக்கு மத்தியில் ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டிருப்பதால் உலகச் சந்தையில் எண்ணெய் விலைகள் மேலும் அதிகரித்து வருகின்றன.