வெள்ள நீரில் மிதக்கும் 900 பாம்புகள்: வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்; நிலைகுலைந்த சீனா!

வெள்ள நீரில் மிதக்கும் 900 பாம்புகள்: வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்; நிலைகுலைந்த சீனா!

தென் சீனாவில் வெள்ளப்பெருக்கு காரணமாக பாம்பு வளர்ப்புப் பண்ணை சேதமடைந்தது. இதனால் பண்ணையிலிருந்த 800 முதல் 900 பாம்புகள் தப்பித்து, சுற்றியுள்ள வீடுகள், சாலைகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்தன.

சூறாவளிப் புயலால் உருவான விபரீத வெள்ளப்பெருக்கு, தென் சீன கிராம மக்களை எதிர்பாராத பேரபாயத்தில் தள்ளியுள்ளது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உடைந்த பாம்புப் பண்ணையிலிருந்து, நூற்றுக்கணக்கான பாம்புகள் தப்பித்து ஊருக்குள் புகுந்ததால், மக்கள் செய்வது அறியாது பீதியில் உறைந்துபோயுள்ளனர்.

சீனாவின் குவாங்சி ஜுவாங் தன்னாட்சிப் பகுதியில் உள்ள ஹெங்சௌ நகருக்கு அருகிலிருக்கும் டெங்வெய் கிராமத்தில்தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கொட்டித் தீர்த்த கனமழையால் அப்பகுதியின் நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிந்து, கரைகள் உடைந்ததால் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம் கிராமத்தைக் சூழ்ந்தது. வெள்ள நீரில் மூழ்கிய உள்ளூர் பாம்பு வளர்ப்புப் பண்ணையில் இருந்து, சுமார் 800 முதல் 900 பாம்புகள் வரை தப்பித்து வீடுகளுக்குள்ளும் விவசாய நிலங்களுக்குள்ளும் புகுந்துள்ளன. சீன அரசு ஊடகங்களில் வெளியான காணொளிகள் காண்போரைச் சிலிர்க்க வைக்கின்றன. சேறு நிறைந்த வெள்ள நீரில் பாம்புகள் கூட்டமாக அடித்துச் செல்லப்படுவதும், அதில் ஒரு ஆபத்தான நாகப்பாம்பு சீறிப்பாயும் நீரோட்டத்தில் தன் தலையைத் தூக்கிக்கொண்டு மிதந்து வருவதும் அந்தச் சீற்றத்தின் தீவிரத்தைக் காட்டுகிறது.

தென் சீனாவைத் தாக்கிய சூறாவளிப் புயல், குவாங்சி பகுதி முழுவதும் வரலாறு காணாத மழைப் பொழிவையும், வெள்ளப்பெருக்கையும் ஏற்படுத்தியது. டெங்வெய் கிராமத்திற்குள் சீறிப்பாய்ந்து வந்த வெள்ள நீர், அங்கு செயல்பட்டு வந்த பாம்புப் பண்ணையை சுவடே தெரியாமல் தகர்த்தெறிந்தது. இதன் விளைவாக, பண்ணையில் அடைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பாம்புகள் தப்பித்து, சுற்றியிருந்த விவசாய நிலங்கள், பிரதான சாலைகள் மற்றும் மனிதர்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் பரவத் தொடங்கின.

ஜூலை 7 அன்று இச்சம்பவத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்திய உள்ளூர் அதிகாரிகள், உடனடியாக அவசரநிலையை அறிவித்தனர். கிராம மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்றும், வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டனர். வெள்ள நீரில் இறங்குவதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கப்பட்டதோடு, பாம்புகளைக் கண்டால் உடனடியாகத் தகவல் தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டது. தப்பித்துத் திரியும் பாம்புகளைப் பிடிக்க உள்ளூர் அதிகாரிகளும் கிராம மக்களும் பிரத்யேக வலைகள் மற்றும் உபகரணங்களுடன் மீட்புக் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர். தப்பிய பாம்புகளில் பெரும்பாலானவை தண்ணீர் பாம்புகள் மற்றும் 'கிங் ரேட்' (King Ratsnakes) போன்ற நஞ்சற்ற வகையைச் சேர்ந்தவைதான் என்றாலும், ஆபத்தான விஷ நாகப்பாம்புகளும் அவற்றுடன் தப்பியோடியுள்ளதுதான் மக்களை மேலும் பீதியடையச் செய்துள்ளது. தொடர்ந்து, பாம்புக்கடியில் இருந்து தப்பிப்பதற்கான அவசர வழிகாட்டு நெறிமுறைகளை நிர்வாகம் உடனடியாக வெளியிட்டுள்ளது. இதற்கிடையே, தப்பிய பாம்பு கடித்து ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இருப்பினும், வெள்ளநீர் வடியத் தொடங்கியுள்ளதால், பல பாம்புகள் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் அல்லது வேறு தொலைதூரப் பகுதிகளுக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும், இதனால் கிராம மக்களுக்கு இருக்கும் நீண்டகால ஆபத்து குறைய வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த பாம்புப் பிரச்னை ஒருபுறமிருக்க, குவாங்சி மாகாணம் சமீபத்திய ஆண்டுகளில் கண்டிராத மிக மோசமான வெள்ளப் பேரழிவை சந்தித்துவருகிறது. சூறாவளியால் கொட்டித் தீர்த்த கனமழை, மாகாணம் முழுவதும் பயங்கர நிலச்சரிவுகளையும், உள்கட்டமைப்பு சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது சில இடங்களில் நீர்மட்டம் குறையத் தொடங்கியிருந்தாலும், மீண்டும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரித்துள்ளது, மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களையும் கிராம மக்களையும் மேலும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.