நீட் போராட்டத்தில் முழங்கிய சனம் ஷெட்டி.. தியேட்டருக்கு வெளியே செம குத்தாட்டம்
சென்னை: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையோடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லியில் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். பிறகு அது மாணவர்கள் போராட்டமாக மாறி தமிழ்நாட்டிலும் நடைபெற்றுவருகிறது. சூழல் இப்படி இருக்க அந்தப் போராட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு சனம் ஷெட்டி கலந்துகொண்டு பேசிய விஷயங்கள் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தன.
மருத்துவ படிப்பு படிப்பதற்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்பதில் ஒன்றிய பாஜக அரசு விடாப்பிடியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் அனிதா தொடங்கி பல மாநிலங்களில் பல மாணவர்கள், மாணவிகள் உயிரை விட்டாலும், தங்கள் கனவை சிதைத்தாலும் நீட்டை நீக்க முடியாது என திட்டவட்டமாக உள்ளது ஒன்றிய அரசு. இது ஒருபக்கம் இருக்க நீட் தேர்வு வினாத்தாள் அண்மையில் கசிந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்காக டெலிகிராம் செயலியை எல்லாம் தடை செய்தது.

வெடித்த போராட்டம்: சூழல் இப்படி இருக்க வினாத்தாள் கசிந்ததற்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரும், மாணவர்களும் சேர்ந்து டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினார்கள். அப்போராட்டத்தை வழக்கம்போல் ஒன்றிய அரசு அலட்சியத்தாலும், அதிகாரத்தாலும் ஒடுக்க பார்த்தது. ஆனால் போராட்டக்காரர்களின் மன உறுதிக்கு நிகராக எதுவும் இல்லாததால்; தர்மேந்திரர் பதவி விலகிவிட்டார்.
தமிழ்நாட்டில் போராட்டம்: இதற்கிடையே டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டம் தமிழ்நாட்டிலும் பரவியது. இங்கே மாணவர்கள், மாணவிகள் மெரினாவில் போராட நினைத்திருந்தார்கள். ஆனால் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அரசு கடற்கரையை மூடிவிட்டது. அதனைத் தொடர்ந்து பாலன் இல்லத்தில் கூடி போராடினார்கள். அமீர், வெற்றிமாறன், பா.இரஞ்சித் என பல திரையுலக நட்சத்திரங்களும் கலந்துகொண்டு ஆதரவு கொடுத்தார்கள்.
சனம் ஷெட்டி என்ட்ரி: இப்போராட்டத்தில் எந்த அரசியல் சாயமும் பூசப்படக்கூடாது என பலரும் தெளிவாக இருந்தார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் நடிகை சனம் ஷெட்டி பாலன் இல்லத்துக்கு சென்று தனது ஆதரவை அளித்தார். அளித்ததோடு மட்டுமின்றி, 'இங்கே ஒரு அஜெண்டாவோடு போராடுகிறார்கள். நான் தளபதி விஜய்யின் ரசிகை. நேற்றுகூட ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்துவிட்டுத்தான் இங்கே வந்திருக்கிறேன்' என பெருமை பொங்க கூறினார். உடனே அங்கிருந்த மாணாக்கர்கள், வெளியேறுங்கள் நீங்கள் பேசவே வேண்டாம் என்று அனுப்பி வைத்தார்கள்.
செம குத்தாட்டம்: இதனால் கடுப்பான சனம், இதெல்லாம் ஜனநாயகமே இல்லை என கொந்தளித்துவிட்டு நடையை கட்டினார். செய்தியாளர்களிடமும் கொதித்து பேசினார். சனம் அப்படி செய்ததற்கு தவெகவினர் தவிர்த்து வேறு யாருமே ஆதரவு கொடுக்கவில்லை. மேலும் பலர் அவரை கடுமையாக ட்ரோல் செய்கிறார்கள். இந்நிலையில் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது.அதாவது, தவெக ட்ரெஸ் கோடில் தியேட்டருக்கு சென்றிருந்த சனம் ஷெட்டி; செம குத்தாட்டம் போட்டு அங்கிருப்பவர்களுக்கு பறக்கும் முத்தத்தை கொடுத்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் முதல் நாள் செம குத்தாட்டம் போட்டுவிட்டு; அடுத்த நாள் போராளி மோடுக்கு சென்றிருக்கிறாரே என்று கிண்டல் செய்துவருகிறார்கள்.