உருவாகிறது 'ரோஜா 2'? - மணிரத்னம் தரப்பு விளக்கம்

உருவாகிறது 'ரோஜா 2'? - மணிரத்னம் தரப்பு விளக்கம்

'பொன்னியின் செல்வன்' படத்துக்கு முன்பாக 'ரோஜா 2' படத்தை மணிரத்னம் உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய திரையுலகின் முன்னணி இயக்குநரான மணிரத்னம் இன்று (ஜூன் 2) தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறது. தற்போது பலரும் முயற்சி செய்து கைவிடப்பட்ட, 'பொன்னியின் செல்வன்' படத்தை இயக்கி வருகிறார். ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், சரத்குமார், ஜெயராம், ஐஸ்வர்யா ராஜேஷ், த்ரிஷா என ஒரு நட்சத்திர பட்டாளமே இதில் நடித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 'பொன்னியின் செல்வன்' படத்தின் சுமார் 40% படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. கரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

நிலைமை சரியானவுடன் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனிடையே, 'பொன்னியின் செல்வன்' படத்தின் அதிகமான நடிகர்கள், போர்க் காட்சிகள் எல்லாம் படமாக்க வேண்டியது இருக்கிறது. அதில் சமூக இடைவெளி சாத்தியமில்லை என்பதால், நிலைமை முழுமையாக சீரானவுடன் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 'பொன்னியின் செல்வன்' படத்துக்கு முன்பாக புதிய படமொன்றை இயக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளார். அது 'ரோஜா 2' எனவும், துல்கர் சல்மான் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக மணிரத்னம் தரப்பில் விசாரித்த போது, "மணிரத்னம் சாருடைய கனவுப் படம் 'பொன்னியின் செல்வன்'. அந்தப் படத்துக்கு முன்பாக வேறு எந்தவொரு படத்தை அவர் திட்டமிடவில்லை. இது தவறான தகவல்" என்று குறிப்பிட்டார்கள்.