சர்வதேச மேடையில் தமிழரின் சாதனை: சுவிஸ் தொழிலதிபருக்கு உலகின் சிறந்த CEO விருது
ஸ்பெயின் மாட்ரிட் நகரில் நடைபெற்ற சர்வதேச அளவிலான "Best CEO Awards 2026" விருது வழங்கும் விழாவில், சுவிஸ் தொழிலதிபரான ஸ்ரீ இராசமாணிக்கம் உலகின் சிறந்த தலைமை நிர்வாக அதிகாரிகளுள் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இந்த உயரிய விருதிற்காக உலகின் 70க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து மொத்தம் 1,089 பேர் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வெறும் 70 தலைவர்கள் மட்டுமே இறுதியாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
தொழில்துறை முன்னேற்றம், புதுமை, மாற்றுத் தலைமையியல் மற்றும் உலகளாவிய தாக்கம் ஆகிய துறைகளில் வெளிப்படுத்திய சிறப்பான பங்களிப்பை மதிப்பீடு செய்து இந்த விருது வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
"Best Awards International USA" அமைப்பு வழங்கிய இந்த விருது, உலக வணிக மற்றும் தொழில்முனைவு துறைகளில் முக்கியமான அங்கீகாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
மேலும், Forbes, CEO Times, Business Insider மற்றும் UAE Time Magazine உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற ஊடகங்களும் இந்த சாதனையை பாராட்டியுள்ளன.

விருது பெற்றதைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஸ்ரீ இராசமாணிக்கம்,
"இது எனது தனிப்பட்ட வெற்றியல்ல; என்னை நம்பி ஆதரித்த அனைவரின் வெற்றியாகும். அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் தெளிவான பார்வை இருந்தால் உலகளவில் மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதற்கான சான்றிதழ் இது" என தெரிவித்தார்.
இந்நிலையில், அவரது இந்த சாதனைக்கு சர்வதேச ரீதியில் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதேவேளை, பிறந்த மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ள இந்த வர்த்தக வித்தகருக்கு கனடா–இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கமும் வாழ்த்து தெரிவித்துள்ளது.