எடை குறைந்த பாண் விற்பனை நிலையங்கள் சுற்றிவளைப்பு
நுகர்வோர் செலுத்தும் பணத்திற்குச் சரியான எடையுள்ள பாண் கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை மற்றும் விசாரணை நடவடிக்கையின் போது, எடை குறைந்த பாண் மற்றும் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையின் கீழ் நாடு முழுவதிலுமுள்ள சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் பேக்கரிகள் உட்பட 118 நிறுவனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், பாணின் சரியான எடை பேணப்படுகிறதா என்பதும், எடை மற்றும் விலை சரியாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதா என்பதும் தீவிரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்றுள்ள ஆரம்பக்கட்ட அறிக்கைகளின்படி, எடைக் தகவல்கள் பெறப்பட்ட விற்பனை நிலையங்கள் மற்றும் பேக்கரிகளின் அடிப்படையில் 54 நிறுவனங்களில் எடை குறைந்த பாண் கண்டறியப்பட்டுள்ளது.
இது தவிர, 76 விற்பனை நிலையங்கள் மற்றும் பேக்கரிகளில் பாணின் எடை சரியாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பதுடன், 65 நிறுவனங்களில் பாணின் விலையும் சரியாகக் காட்சிப்படுத்தப்படவில்லை என வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்தச் சோதனையில், சில்லறை விற்பனை நிலையம் ஒன்றில் எடை குறைந்த பாண் கண்டறியப்பட்ட போது, அந்த நிறுவனத்திற்கு எதிராக மட்டும் சட்ட நடவடிக்கை எடுத்து விசாரணையை முடிக்காமல், தொடர்புடைய விநியோகச் சங்கிலியைப் பின்தொடர்ந்து ஆராய்ந்து 81 பேக்கரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய, குறித்த பேக்கரிகளின் உற்பத்தி நடவடிக்கை மற்றும் அவற்றின் மூலம் ஏனைய விற்பனை நிலையங்களுக்கு பாண் விநியோகிக்கப்படும் விதம் குறித்துப் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
ஒரு முழுப் பாண் 450 கிராமும், அரைப் பாண் 225 கிராமும் கொண்டிருக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
பாணின் எடை, விலை அல்லது ஏனைய வர்த்தக முறைகேடுகள் தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருந்தால், அலுவலக நேரங்களில் 1977 என்ற நுகர்வோர் உடனடி அழைப்பு இலக்கத்திற்குத் தெரிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.