உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு
உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்று (06) இரண்டாவது நாளாகவும் வீழ்ச்சியடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானுடனான போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி உடன்படிக்கையை எட்ட முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அறிக்கையைத் தொடர்ந்து, இவ்வாறு கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருந்து மீண்டும் தடையின்றி எண்ணெய் விநியோகம் ஆரம்பமாகும் என்ற எதிர்பார்ப்பு இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இதன்படி, பிரெண்ட் (Brent) வகை கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் விலை 1.52 டொலர் (1.38%) வீழ்ச்சியடைந்து 108.35 டொலராகப் பதிவாகியுள்ளது.
அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) வகை கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 1.50 டொலர் (1.47%) வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அதன் புதிய விலை 100.77 அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது.
இவற்றுக்கு மேலதிகமாக, மர்பன் (Murban) வகை கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் விலை 105.97 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.