இடியுடன் கூடிய பலத்த மழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டின் தென் மாகாணத்திலும் இரத்தினபுரி, கொழும்பு மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
இலங்கையின் இன்றைய வானிலை நிலவரம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குறிப்பிட்ட பகுதிகளைத் தவிர, நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறண்ட வானிலையே நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய மேல், வடமத்திய, மத்திய, சபரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார், வவுனியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் இத்தகைய பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.
இதனால் ஏற்படக்கூடிய வீதி விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு, பனிமூட்டமான காலப்பகுதிகளில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.