மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம்கொண்ட அரசாங்கத்துடன் மோதுவதற்கான சிறந்த சவால் இதுவே!
கோட்டா-மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையில் ராஜபக்சவினருடைய குடும்பத்தினருக்கே 50 சதவீத அமைச்சுக்கள் பகிரப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி ஆருடம் வெளியிட்டுள்ளது.
47 உறுப்பினர்களை வைத்து 2015ஆம் ஆண்டில் ராஜபக்ச அரசாங்கத்தை வீழ்த்த முடிந்த வகையில், தற்போது கிடைத்துள்ள மக்கள் ஆணையை வைத்து ஐக்கிய மக்கள் சக்தி அடுத்த இலக்கை அடைய முயற்சிக்கும் என்று அக்கட்சியின் தேசியப்பட்டியல் வேட்பாளரான ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இன்றைய தினம் நடைபெற்றது. இதன்போது உரையாற்றிய அக்கட்சியின் தேசியப்பட்டியல் வேட்பாளரான ஹரின் பெர்ணான்டோ, அரசாங்கத்திற்கு மக்கள் வழங்கிய மூன்றில் இரண்டு பெரும்பான்மையை குடும்ப ஆதிகத்தை தக்க வைத்துக் கொள்ளவதற்காக பயன்படுத்தாது மக்களுக்கான சேவையை ஆற்றுவதற்காக ஜனாதிபதியும் பிரதமரும் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசாங்கம் மற்றும் பிரதமருக்கு மீண்டும் நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தி என்ற வகையிலும் எதிர்கட்சி என்கிற வகையிலும் வாழ்த்து தெரிவிக்கின்றோம். நாளை மறுதினம் புதிய அமைச்சரவை நியமனங்கள் இடம்பெறும் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், அமைச்சரவை மற்றும் அரசாங்கம் குறித்த தீர்க்கதரிசனங்கள் இரண்டைத் தெரிவிக்கவும் விரும்புகின்றேன்.
26 அமைச்சர்கள் மாத்திரம் இம்முறை நியமிக்கப்படுவார்கள். அவற்றில் ஒரே குடும்பத்திற்கு மாத்திரம் எத்தனை அமைச்சுப் பதவிகள் பகிர்ந்தளிக்கப்படும் என்பதையும், ஒருசிலருக்கு கீழே 50 சதவீத அதிகாரங்கள் கீழே கொண்டுவரப்படும் என்பதையும் இந்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கிய மக்களுக்கு தெரியவரும்.
தற்போது மக்களிடம் கோரிய பெரும்பான்மை பலம் இந்த அரசாங்கத்திற்குக் கிடைத்திருக்கிறது. ஆகவே எதுவும் செய்யமுடியாது, நிவாரணங்கள் வழங்கமுடியாது என்பதை மக்கள் மத்தியில் வந்து மற்றவர்கள் மீது விரல்நீட்டி குறை சொல்லவும் இந்த அரசாங்கத்திற்கு உரிமையில்லை.
ஐக்கிய மக்கள் சக்தி என்ற வகையில் நாங்கள் தற்போது கிடைத்துள்ள மக்கள் ஆணையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். தவறுகளைத் திருத்திக்கொள்கிறோம். ஐக்கிய தேசியக் கட்சி எம்முடன் இணைந்து பயணிக்க வரலாம்.
ஆனால் அவர்கள் விடாப்படியாக இருந்தால் ஒன்றும் செய்யமுடியாது. நாங்கள் தனிவழியிலேயே பயணிப்போம். வெறும் 47 உறுப்பினர்களை வைத்துக்கொண்டு 2015ஆம் ஆண்டில் 10 வருடங்களுக்குப் பின் ராஜபக்சவின் ஆட்சியை ஐக்கிய தேசியக் கட்சியினால் கவிழ்க்கமுடிந்தது.
அதேபோல இன்று சஜித் பிரேமதாஸவுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம்கொண்ட அரசாங்கத்துடன் மோதுவதற்கான சிறந்த சவால் ஏற்பட்டுள்ளது. இந்த சவாலை நாங்கள் மிக உறுதியுடன் வெற்றிகொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.