சுரேன் ராகவன் நியமனம் தொடர்பில் எழுந்துள்ள அதிருப்தி!

சுரேன் ராகவன் நியமனம் தொடர்பில் எழுந்துள்ள அதிருப்தி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குரிய தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சுரேன் ராகவன் நியமிக்கப்பட்ட விதம் குறித்து சுதந்திரக் கட்சி அதிருப்தியில் இருப்பதாக அந்த கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலுக்கு இரண்டு பேரது பெயர்களை வழங்கியிருந்தது. அவர்களில் ஒருவரான சுரேன் ராகவனை தேசிய பட்டியலில் நியமிப்பது சம்பந்தமாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர அல்லது வேறு பொறுப்பான எவரிடமும் கலந்தாலோசிக்கவில்லை எனவும் பியதாச குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் பெயரிடப்பட்ட சுதந்திரக் கட்சியை சேர்ந்த மற்றைய பிரதிநிதி தான் எனவும், தமிழர் ஒருவருக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்காக சுரேன் ராகவனை நியமித்ததாக பொதுஜன பெரமுனவின் பிரதானிகள் கூறியதாகவும் ரோஹன லக்ஷ்மன் பியதாச குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிறுத்திய 26 உறுப்பினர்களில் 14 பேர் வெற்றி பெற்றுள்ளனர் எனவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட மொத்த ஆசனங்களுடன் ஒப்பிடும் போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இரண்டு தேசிய பட்டியல் ஆசனங்களை வழங்குவது நியாயமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.